பலத்த காற்று வீசுவதால் கட்டுக்கடங்காத காட்டுத்தீயை அணைக்கப் போராடும் கிரீஸ்

கிரீஸின் ரோட்ஸ்  தீவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ மூண்டுள்ளது.

30,000 பேர் வீடுகள், ஹோட்டல்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரத்தின் பெரும்பாலான நாள்களில் காட்டுத்தீ தொடர்ந்தபோதிலும் ரோட்ஸ் தீவின் மலைப்பகுதியின் உட்புறத்தை மட்டுமே அது சூழ்ந்திருந்தது.

பலத்த காற்றுடன் கூடிய கடும் வெப்பத்தால் அது தீவின் கிழக்குக் கரையோரப் பகுதிக்குப் பரவியது. காட்டுத்தீயை இப்போதைக்குக் கட்டுக்குள் கொண்டுவர முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தீயை அணைக்கத் தீயணைப்பாளர்கள் போராடுகின்றனர்.

பள்ளிகள், ஹோட்டல்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவை தற்காலிகத் தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளன. கிரீஸில் நிறையப் பகுதிகளில் காட்டுத்தீ பரவியுள்ளது. கடந்த 11 நாள்களாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது.

கிரீஸ் இதுவரை காணாத அளவில் ஆக அதிகமான நாள்களுக்குக் கடும் வெப்பத்தைச் சந்திக்கக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த மாத இறுதிவரை அது நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

-sc