கிளந்தானில் அன்வார் துண்டறிக்கை விநியோகித்த 13பேர் கைது

நேற்று மாலை, கிளந்தானில் அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்கு மீதான துண்டறிக்கைகளை விநியோகம் செய்த பிகேஆர் உறுப்பினர் 13 பேர் போலீசால் கைது செய்யப்பட்டனர்.

அந்த அறிக்கையில் குதப்புணர்ச்சிII  வழக்குக்  காலவரிசைப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் அடுத்த வாரம் மாச்சாங்கில் மாற்றரசுக் கட்சித் தலைவரின் ‘செராமா’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தகவலும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜனவரி 9-இல் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முன்னர் நாடு முழுக்க தமக்கு  ஆதரவுதேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அன்வார் ஜனவரி 5-இல் மாச்சாங்கில் உரையாற்றுவார்.

13பேரில் அறுவர் ஒரு சாலைத் தடுப்பில் நிறுத்தப்பட்டு பின்னர் கோலா க்ராய் போலீஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டனர். அறுவரில் ஒருவர் கிளந்தான் பிகேஆர் இளைஞர் தலைவர் முகமட் அஸிஹான் சே சமன்.

மற்ற எழுவர், கிளந்தான் பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் ரோஸ்லான் பூத்தே உள்பட, தானா மேரா போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

அவர்கள் தானா மேரா மார்க்கெட்டில் துண்டறிக்கைகள் விநியோகம் செய்துகொண்டிருந்தபோது பிடிபட்டதாக தானா மேரா எம்பி, அம்ரான் அப்துல் கனி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நானும் போலீஸ் நிலையம் சென்றிருந்தேன்”, என்றாரவர்.

அவர்கள் இன்று முழுக்க காவலில் வைக்கப்படலாம் என்று தகவல் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, முகம்மட் அஸிஹான், தாமும் மேலும் ஐந்து பிகேஆர் உறுப்பினர்களும் கோலா கிராயில் போலீஸ் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறினார்.

“மாலை மணி 5.30 அளவில், துண்டறிக்கைகளும் கட்சிக் கொடியையும் வைத்திருந்ததற்காக தடுத்து நிறுத்தப்பட்டோம். எங்கள் பொருள்களை எல்லாம் பறிமுதல் செய்தார்கள்”, என்றாரவர். 

அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

அன்வார், குதப்புணர்ச்சி வழக்கில் நீதிபதி முகம்மட் சபிடின் முகம்மட் டியா தீர்ப்புச் சொல்லுமுன்னர் நாடு முழுக்க 18 இடங்களில் பேசுவார்.

பக்காத்தான் தலைவர், கோலாலம்பூரிலும் ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங், திரெங்கானு, கிளந்தான், பினாங்கு, சிலாங்கூர், ஆகிய மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செய்து ஆங்காங்கே உரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.