அல்ஜீரியாவில் காட்டுத் தீயால் பேரழிவு, இதுவரை 34 பேர் பலி

பேரழிவை தந்துகொண்டிருக்கும் காட்டுத் தீயை அணைப்பதில் அல்ஜீரியா போராடிக் கொண்டிருக்கிறது.

வடக்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியா, காட்டுத் தீ பாதிப்பினால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். காட்டுத் தீக்கு இதுவரை 34 பேர் பலியாகியுள்ளனர். பலர் வீடுகளை இழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், 90-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ஐந்தில் நான்கு பகுதியை அணைத்துள்ளதாக அல்ஜீரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது. தீவிர காற்றினால் அல்ஜீரியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, அண்டை நாடான துனீசியாவிலும் பரவி வருகிறது.

பூமியின்வெப்ப உயர்வுக் காரணமாக உலகின் பல நாடுகளில் வெப்ப அலை நிலவுகிறது. சீனா, அமெரிக்கா, ஐரோப்பா, வட ஆப்பிரிக்காவில் கடுமையான வெப்ப அலை நீடிக்கிறது. கடந்த வாரம் கீரிஸில் காட்டுத் தீ ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காலநிலை மாற்றம் நம் கண் முன்னே அரங்கேறி வருகிறது. உலகெங்கிலும் லட்சக்கணக்கான வனவிலங்குகள் அவற்றின் பாதிப்பை உணர்ந்து வருகின்றன. மனிதர்களும் அதன் தீவிரத்தை கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகின்றனர்.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு பூமி வெப்பமடைதலை குறைப்பதற்கான செயல்பாடுகளை விரைவாக நகர்த்த வேண்டிய சூழலில் மனித இனம் உள்ளது என்ற எச்சரிக்கையை சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

 

 

-th