ஊழல்களில் சிக்கியிருப்பதாகக் கூறப்படும் மகளீர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜாலில் மற்றும் துணை நிதி அமைச்சர் அவாங் அடெக் ஹுஸ்ஸின் ஆகிய இருவரும் தம்முடைய முன்னுதாரணத்தைப் பின்பற்றி பதவி விலகுமாறு மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையத்தின் (எம்எசிசி) முன்னாள் ஆலோசகர் ரோபர்ட் பாங்க் கேட்டுக்கொண்டார்.
“நான் எம்எசிசியின் ஆலோசகர் குழாமிலிருந்த போது சிலாங்கூர் முன்னாள் மந்திரி புசார் கீர் தோயோ மற்றும் மாஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் தஜுடின் ரமலி ஆகியோரின் பல முறைகேடான செயல்பாடுகளை வெளிப்படுத்தினேன். அப்போது, ஒரு வலைப்பதிவர் அரசாங்கக் குத்தகைகள் விவகாரத்தில் என்னை இலஞ்சத்துடன் தொடர்புபடுத்தினார்.
“நான் உடனடியாக எம்எசிசி ஆலோசகர் குழாமிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தேன், ஏனென்றால் எம்எசிசி அது குறித்து புலன்விசாரணை நடத்த வேண்டியுள்ளது. நான் அங்கு இருக்க முடியாது. அங்கிருந்தால் புலன்விசாரணையில் நான் எனது செல்வாக்கை பயன்படுத்த முயற்சிக்கிறேன் என்று மக்கள் கூறுவார்கள்”, என்று பாங்க் கூறினார்.
அதுபோல, ஷாரிஸாட்டும் அவாங்கும் செய்ய வேண்டிய கௌரவான செயல் பதவி விலகுவதாகும் என்று இன்று பிற்பகல் கோலாலம்பூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பாங்க் கூறினார்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தீர்க்கப்படும் வரையில் அவ்விருவரும் அரசாங்கத்தின் அங்கமாக இருக்கக்கூடாது ஏனென்றால் அது பிரதமர் நஜிப்பின் நிருவாகத்திற்கு அவப்பெயரை உண்டுபண்ணும் என்று அவர் மேலும் கூறினார்.