பெரிக்காத்தானில் இணைந்த இந்தியர்களின் பரிதாப நிலை

இராகவன் கருப்பையா – நாட்டில் உள்ள ஒட்டு மொத்த மலாய்க்காரர்களையும் கவர்ந்திழுத்து ஆட்சியைக் கைப்பற்றத் துடித்துக் கொண்டிருக்கும் பெரிக்காத்தான் கூட்டணியைச் சேர்ந்த பெர்சத்துவும் பாஸ்கட்சியும் கொஞ்சம் கூட நா கூசாமல் இனத்துவேசக் கருத்துகளை உமிழ்ந்து வருகின்றன.
இருந்த போதிலும் குறிப்பிட்ட சில இந்தியர்களும் சீனர்களும் கடுகளவும் சங்கோஜமின்றி அக்கட்சிகளுடன் இணைந்து உல்லாசம் காணத் துடிப்பது நமக்கு பெரும் வியப்பாக உள்ளது மட்டுமின்றி அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
“இந்நாடு மலாய்க்காரர்களுக்கு மட்டும்தான் சொந்தம். மற்றவர்கள் எல்லாம் வந்தேறிகள். பிழைப்புத் தேடி வந்த அவர்கள் தத்தம் நாடுகளுக்குத் திரும்பாமல் இங்கேயே தங்கிவிட்டனர். மலாய்க்காரர்களின் உரிமைகள் பறிபோகின்றன. இந்நாட்டில் ஊழல் மலிந்து கிடப்பதற்கு மலாய்க்காரர் அல்லாதார்தான் காரணம். அரசாங்கத்தில் அவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மலாய்க்காரர்கள் மட்டும்தான் நாட்டை ஆட்சி புரிய வேண்டும்.” இப்படியெல்லாம் அல்லும் பகலும் அவ்விரு கட்சிகளின் தலைவர்களும் நாவடக்கம் இல்லாமல் இனத்துவேச விஷக் கருத்துகளை கக்கி வருவது எல்லாருக்கும் தெரியும்.
மலாய்க்காரர் அல்லாதாருக்கு சினமூட்ட வேண்டும் என்பது அவர்களுடைய நோக்கமில்லை. மாறாக, நகர் புறங்களுக்கு அப்பால் வசிக்கும் மலாய்க்காரர்களை உசுப்பிவிட்டு இடையில் அரசியல் ஆதாயம் காண வேண்டும் என்பதே அவர்களுடைய பிரதான நோக்கமாகும்.
இவர்களுக்கு பின்னால் இருந்து மாபெரும் தூண்டுகோலாக இருப்பது முன்னாள் பிரதமர் மகாதீர் என்பதும் யாவரும் அறிந்த ஒன்றுதான். மலாய்க்காரர் அல்லாதாரின் இதயங்களை காயப்படுத்துவது பற்றி அவர்களுக்கு கிஞ்சிற்றும் கவலையில்லை.
இதெல்லாம் மிகவும் அப்பட்டமாக தற்போது நம் நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கிற நிதர்சனம் என்ற போதிலும் நம் சமூகத்தைச் சேர்ந்த சிலர் கண்மூடித்தனமாக அவர்களுடன் கைகோர்த்து கூத்தடிப்பதைப் பார்க்க பரிதாபமாக உள்ளது.
இதனை அறியாமை என்பதா, அறிவிலித்தனம் என்பதா அல்லது பெரிக்காத்தானின் அரசியல் சாணக்கியம் என்று சொல்லதா தெரியவில்லை. இத்தேர்தல்களில் பக்காத்தானை பிரதிநிதித்து போட்டியிடும் இந்தியர்களை விட கூடுதலான இந்திய வேட்பாளர்களை நிறுத்தி நமக்கு மாய வலை விரித்துள்ளது பெரிக்காத்தான்.
‘பொருத்தமில்லாத ஜோடிகள் செருப்பாகக்கூட இருக்க முடியாது’ எனும் சொற்றொடருக்கு ஏற்ப அந்தக் கூட்டணியினால் நம் சமூகத்தினருக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதுதான் உண்மை.
பிரதமர் அன்வாரை வீழ்த்த வேண்டும், கூடிய விரைவில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் எனும் ஒரே நோக்கத்தில் இந்தியர்களை அவர்கள் பகடை காயாக உருட்டுகின்றனர் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
அவ்விரு கட்சிகளும் அண்மைய வாரங்களாக நம் இனத்தின் மீது பரிதாபப்பட்டு நமக்காக நீலிக்கண்ணர் வடிக்கும் நாடகத்தையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஆனால் புது வசந்தம் கிடைக்கிறதே எனும் நப்பாசையில் நம் இனத்தைச் சேர்ந்த சிலர் அவ்விரு இனவாத கட்சிகளுடன் இணைந்து அரசியல்  நடத்த முற்பட்டுள்ளனர்.
அவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் முன்னாள் ம.இ.கா. உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பார்த்திபன் மற்றும் அதன் சிலாங்கூர் மாநில இளைஞர் தலைவர் புனிதன் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.
வரலாறு காணாத அளவுக்கு வலுவிழந்துக் கிடக்கும் ம.இ.கா. மீது அவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டதையே இது காட்டுகிறது. இனிமேலும் ம.இ.கா.வில் தொத்திக் கொண்டிருப்தில் ஒரு பயனும் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கக் கூடும். இருந்த போதிலும் பெரிக்காத்தான் கூட்டணியிலா இணைவது, எனும் கேள்வி எழவேச் செய்கிறது. காற்றடித்தால் சாயும் நானலைப் போல அரசியல் ஆதாயம் தேடத் தாவியுள்ளதைப் போல்தான் தெரிகிறது.
இரண்டொரு தினங்களுக்கு முன் கூட பெர்சத்து கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் முஹிடின் கடுமையான இனத்துவேசக் கருத்து ஒன்றை உமிழ்ந்தார். அதாவது ஜ.செ.க.வின் நெருக்குதல்களுக்கு அன்வார் அடிபணிந்து கிடக்கிறார் என்றும் மலாய்க்காரர் அல்லாதார்தான் நாட்டை தற்போது ஆட்சி செய்கின்றனர் எனவும் சிந்தனைக்கு எட்டாத, அறிவிலித்தனமான ஒரு கருத்தை அவர் வெளியிட்டார்.
அக்கட்சியின் இந்திய பிரிவுக்கு துணைத் தலைவராக புனிதன் நியமிக்கப்பட்டுள்ளார். முஹிடின் அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக இருந்த ஹம்ஸா ஸைனுடின் அப்பிரிவின் தலைவர் என்பதுதான் வேடிக்கையான விஷயம்.
ஆளும் கூட்டணியைச் சேர்ந்த இந்திய பிரதிநிதிகள் கடந்த 7 மாதங்களாக நம் சமூகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என்றும் எதிர்கட்சியில் இருந்து கொண்டு தாங்கள் குரல் கொடுக்கப் போவதாவும் இணைய ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த புனிதன் குறிப்பிட்டது மற்றொரு வேடிக்கை செய்தி.