ரஷிய ஹேக்கர்களின் சைபர் தாக்குதலால் இத்தாலியில் வங்கிசேவை முடக்கம்

இத்தாலியில் 6 முக்கிய வங்கிகளை ஒரே நேரத்தில் முடக்கி ‘ஹேக்கர்’கள் சைபர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஐரோப்பா நாடான இத்தாலி எழுத்தாளர்களுக்கும், ஓவியர்களுக்கும் பெயர்பெற்றது. உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றான இங்கு அவ்வப்போது சைபர் தாக்குதல்களும் அரங்கேற்றப்படுகின்றன. கடந்த பிப்ரவரி மாதத்தில் குறிப்பிட்ட சாப்ட்வேர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட கம்யூட்டர்கள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. இதனால் நாட்டின் இணைய பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் நாட்டின் முக்கிய வங்கிகளான எம்.பி.எஸ் வங்கி, பி.பீ.ஈ.ஆர் வங்கி, சோன்ட்ரியோ வங்கி, பின்கோ வங்கி, செ வங்கி உள்ளிட்ட 5 வங்கிகளின் இணையதளங்கள் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டன. மேலும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் இணைய சேவையும் முடக்கப்பட்டது.

இந்த முடக்கம் காரணமாக வங்கி பரிவர்த்தனைகள், பண பரிமாற்றங்கள், பணத்தை டெபாசிட் செய்தல், திரும்ப பெறுதல் உள்ளிட்ட வங்கிசேவைகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டன. இதனால் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வங்கி சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பின. இந்த சைபர்-தாக்குதலுக்கு ரஷியாவை சோந்த ‘நோ நேம் 057’ ஹேக்கர்கள் குழு பொறுப்பேற்று உள்ளது. “இது ஆரம்பம்தான்” எனவும் எச்சரிக்கை விடுத்தும் குறுஞ்செய்திகளை உலாவ விட்டுள்ளனர். இந்த திடீர் முடக்கத்தினால் எந்தவித இழப்புகளையும் வங்கிகள் சந்திக்கவில்லை என அதன் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

இதேபோல கடந்த திங்கட்கிழமை அன்று நாட்டின் பொது போக்குவரத்து தளங்கள் முடக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இந்த சைபர்-தாக்குதல் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து நாட்டின் சைபர்-பாதுகாப்பு முகமையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வளர்ந்த நாடான இத்தாலியில் ஒரே நேரத்தில் வங்கிகள் முடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

-dt