பிறப்பின் ஆனந்தம் எல்லையற்றது. பிறந்துள்ள இப்புதிய ஆண்டில் கடந்த ஆண்டு கண்ட எழுச்சிகளும் சீற்றங்களும் தொடரும். காரணம், மனிதகுலம் வளர்ச்சி என்ற போர்வையில் உண்டாக்கிய ஏற்றத்தாழ்வுகளும் தேவைக்கு அதிகமான இயற்கையை பிழிந்து வருவதன்வழி உருவாகும் பருவநிலை மாற்றமும்; மானுடம் என்பது பொருளியல் உற்பத்திற்குப் பணையம் வைக்கப்பட்டு, மனிதர்களே பொருட்கள் போல பட்டுவாடா செய்யப்படும் நிலையும், உலகம் என்பது உயிரினங்களுக்கு சொந்தம் என்ற நியதியை மாற்றியுள்ளது. உலகம் ஒரு குறிப்பிட்ட குழுவினரால் இயக்கப்படுவதை உணர்ந்ததால், அதை நிறுத்த புதிய மாற்றம் தேடி மானுடம் மீண்டும் தலைதூக்குகிறது! நீதியை தேட, நியாயம் கோர – மானுடம் எழுந்துவிட்டது!
தேடிச் சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப் பருவமெய்தி
கொடுங் கூற்றுக்கிரையென பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போல
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
என்ற பாரதியாரின் சொற்கள் நம் மனதை ஊடுருவ.
அக்னிக் குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ.
என்ற கவிதை உரமேற்ற, மானுடமாக இப்புவியில் விடுதலை கோர கரங்களை இணைப்போம்.
இவ்வாண்டும், இனிவரும் ஆண்டுகளும் நம் அனைவருக்குமான அன்பையும் இன்பதையும் பொழியும் ஆண்டுகளாகட்டும்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள் செம்பருத்தி குடும்பத்தினர்.