போலீசாரின் நடவடிக்கையால் மாணவர்கள் காயமடைந்தனர்

புத்தாண்டு பிறந்த சில மணி நேரத்தில், தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரீஸ் கல்வி போதனை பல்கலைக்கழகத்திற்கு (யுபிஎஸ்ஐ) வெளியில் கல்விச் சுதந்திரம் கோரி அமைதியாகக் கூடியிருந்த மாணவ ஆர்வலர்களை போலீசார் மூர்க்கத்தனமாக கலைத்த பின்னர், சுமார் 20 மாணவர்களை கைது செய்தனர்.

கலைந்து செல்லுமாறு தஞ்சோங் மாலிம் ஒசிபிடி ஓத்மான் நாயன் விடுத்த பல்வேறு எச்சரிக்கைகளுக்குப் பின்னரும் அம்மாணவர்களும் இதர 60 சக ஆர்வலர்களும் கலைந்து செல்ல மறுத்து விட்டனர்.

மாறாக, அவர்கள் பூட்டப்பட்டிருந்த பல்கலைக்கழக வாயிற்கதவுக்குச் சென்று அதனைக் குலுக்கி அவர்கள் உள்ளே செல்வதற்கு திறக்குமாறு கோரினர்.

அதனைத் தொடர்ந்து, சுமார் 30 போலீசார் ஆர்ப்பாட்ட தலைவர்களைப் பலவந்தமாக பிடித்தனர். பலர் அதனை எதிர்த்தனர்.

அவர்களில் ஒருவர் காமி என்ற அமைப்பின் தலைவர் ஹஸிக் அப்துல்லா அப்துல் அஸிஸ். அவரை மூன்று போலீசார் வலைத்துப் பிடிக்க முயன்றனர். வலுவான உடலமைப்பைக் கொண்ட அவர் அந்த போலீஸ்காரர்களை நெருங்கவிடவில்லை.

இன்னும் ஐந்து போலீஸ்காரர்களும் சேர்ந்து அம்மாணவர் தலைவரை கீழே சாய்த்துப் பிடித்தனர்.

ஹஸிக் அப்துல்லாவை போலீசார் தூக்கிச் செல்லும் தருணத்தில் அவர் மயக்க முற்றார். அப்போது எழும்பிய ஒரு பெரும் சத்தத்தினால் அங்கிருந்த செய்தியாளர்களின் கவனம் திடீரென வேறுபக்கம் திரும்பியது.

அச்சத்தம் ஒரு கிளினிக்கின் கதவு உடைக்கப்பட்டதால் எழும்பியது. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட இன்னொரு அமைப்பான பெபாஸ்சின் மாணவர் தலைவர் முகம்மட் ஷாப்வான் அனாங்கிற்கு மருத்து உதவி தேவைப்பட்டதால் அச்சம்பவம் ஏற்பட்டது.

ஆனால், முகம்மட் ஷாப்வானுக்கு அங்கு மருத்துவ உதவி கிடைக்காததால், மாணவர்கள் அங்கிருந்து வெளியேறினர். அவர் ஒரு வண்டியிலேற்றி அங்கிருந்து கொண்டுசெல்லப்பட்டார். அவர் அனேகமாக ஒரு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம்.

அந்த 24 மணி நேர கிளினிக்கில் மருத்துவர் இருந்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அங்கிருந்த ஒரு மருத்துவ பணியாளர் அது போன்ற நோயிக்கு அவர்களால் சிகிட்சை அளிக்க இயலாது என்று மலேசியாகினியிடம் கூறினர்.

முகம்மட் ஷாப்வானை வண்டியில் ஏற்றிய ஒருவர் அந்த மாணவர் தலைவர் தமது மார்பை இருக்கமாக பிடித்திருந்ததாகவும் அவரது வாயிலிருந்து இரத்தம் கசிவதைக் கண்டதாகவும் கூறினார்.

“அனைவரின் கவனமும் அந்தக் கைதால் (இதர மாணவர்கள் கைது செய்யப்பட்டது) ஈர்க்கப்பட்டது. நான் எனக்குப் பின்னால் திரும்பி பார்த்த போது, மூன்று போலீஸ்காரர்கள் ஷாப்வானை கட்டுப்படுத்த முயன்றதை நான் பார்த்தேன். பின்னர், அவர் பலவீனமடைந்து உடம்பு குலுங்கத் தொடங்கியது. அவரது வாயிலிருந்து இரத்தம் வெளியாகியது”, என்றாரவர்.

கைது காலை மணி 2.40 க்கு தொடங்கியது

மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் கிழக்கு வாயிலில் புத்தாண்டை வரவேற்பதற்காகவும் கல்விச் சுதந்திரம் கோருவதற்காகவும் காலை மணி 12.30 க்கு கூடினர்.

போலீசார் அவர்களை எதிர்கொண்டதும், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று பல்கலைக்கழகத்தின் முதன்மை வாயிற்கதவு முன்பு காலை மணி 2.00 அளவில் கூடினர். அப்போது அவர்கள் “சுதந்திரம்! சுதந்திரம்! மாணவர்களை விடுவிக்கவும்!” என்று முழக்கமிட்டனர்.

எல்எம்பி என்ற அமைப்பின் அடாம் அட்லி அப்துல் ஹலிமுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அம்மாணவர்கள் அங்கு கூடியிருந்தனர். அடாம் அட்லி அங்கு இருந்தார்.

அடாம் அட்லியும் யுபிஎஸ்ஐ மாணவர்தான். கடந்த மாதம் அம்னோ தலைமையகத்தில் பிரதமர் நஜிப் ரசாக்கின் படம் பொரிக்கப்பட்டிருந்த கொடியை இறக்கியதற்காக அவர் பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் முதன்மை வாயிற்கதவை போலீசார் வந்தடைந்ததும் மாணவர்கள் தரையில் படுத்துக்கொண்டு நகர மறுத்தனர்.

பின்னர், அவர்கள் போலீஸ் இலகு தாக்குதல் பிரிவின் அதிகாரிகளுடம் நேருக்கு நேர் நின்றனர். அவர்கள் சுலோகங்களை முழங்கிக்கொண்டு “பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுங்கள்” என்ற வாசகம் பொரிக்கப்பட்ட 30 மீட்டர் நீளமுள்ள பதாகையை விரித்துப் பிடித்தனர்.

சில நிமிடங்களுக்குப் பின்னர், சுமார் காலை மணி 2.40 அளவில், அக்கூட்டத்தினர் முதன்மை வாயிற்கதவை நெருங்கியதும் மோதல் தொடங்கியது.

காலை மணி 3.00 அளவில், மாணவர்களில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டனர் அல்லது முகம்மட் ஷாப்வானுடன் மருத்துவமனைக்குச் சென்று விட்டனர். எஞ்சியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மாணவிகளே. அவர்களுக்கு எதிராக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போலீசார் அந்த இடத்தைச் சுற்றிவலைத்திருந்ததால், அந்த மாணவர் கூட்டத்தில் மிஞ்சியிருந்த சிலர் பின்னர் வெளியேறினர்.

போலீஸ் நிலையத்திற்கு வெளியில் ஒரு பிஎஸ்எம் (மலேசிய சோசலிசக் கட்சி) உறுப்பினரும் கைது செய்யப்பட்டார்.

இந்த மாணவர் ஆர்ப்பாட்டத்தை இரு மாணவர் அமைப்புகள் – எஸ்எம்எம் மற்றும் பெபாஸ் – கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன.

முகம்மட் ஷாப்வான் தஞ்சோங் மாலிம் மருத்துவமனைக்கு அனுப்பட்டு, பின்னர் சிலிம்ரிவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக ஒரு எஸ்எம்எம் டிவிட்டர் கூறியது.

குறைந்தது இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சம்பவம் நடந்த இடத்திலேயே காயம் ஏற்பட்டது. ஆனால் அதிகமான காயங்களைக் காட்டும் படங்கள் டிவிட்டரில் காணப்படுகின்றன.

மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தஞ்சோங் மாலிம் போலீஸ் நிலையத்திற்கு முன்பு காலை மணி 4.00 அளவில் “பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுங்கள்” என்று முழக்கமிட்ட பிஎஸ்எம்மின் உறுப்பினர் மன்டீப் சிங் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் நிலையத்தினுள்ளிருந்து குறுஞ்செய்தி வழியாக மன்டீப் அனுப்பிய செய்தியிலிருந்து மொத்தம் 16 மாணவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பிஎஸ்எம் தகவல் கூறுகிறது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு உதவி அளிப்பதற்காக பிகேஆர் இளைஞர் பிரிவு தகவல் துணைத் தலைவர் ரோஸான் அசென் மாட் ரசிப், எதிரணி ஆதரவுக்குழுவினர் – ஜிங்கா 13 மற்றும் அசல்கான் புக்கான் அம்னோ (அபு) ஆகியோர் போலீஸ் நிலையத்தில் இருந்தனர்.

முகம்மட் ஷாபான் விலா எலும்பு முறிந்துள்ளதாகவும் அவரது நிலைமை மோசமாக இருப்பதாகவும் தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ரோஸான் கூறினார்.