பாகிஸ்தனில் உள்ள சீனத் தூதரகம் தனது குடிமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பலுசிஸ்தான் மாநிலத்தில் 13 ஆகஸ்ட் சீன ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கவாதர் நகரின் விமான நிலையத்திலிருந்து துறைமுகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த சீனக் குடிமக்கள் மீது துப்பாக்கி ஏந்திய கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிக்காரர்களில் இருவரைப் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். வாகன அணியில் சென்ற சீனக் குடிமக்கள் எவரும் காயமடையவில்லை.
சிறிய ஆயுதங்களுடன், கையெறி குண்டுகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பலுசிஸ்தான் விடுதலைப் படை பொறுப்பேற்றுள்ளது. சீனக் குடிமக்கள் நால்வரும், பாகிஸ்தான் ராணுவத் துருப்பினர் ஒன்பது பேரும் தனது தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்தக் கிளர்ச்சிக் குழு கூறியது.
சீனா அதன் இணைப்பும் பாதையும் திட்டத்தின்கீழ் கவாதர் நகரில் துறைமுகத்தைக் கட்ட அதிக முதலீடு செய்துள்ளது. இணைப்பும் பாதையும் திட்டம் வழி ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றுடனான ஆசியாவின் வர்த்தகத்தை நில, கடல் கட்டமைப்புகள் வழி அதிகரிக்கச் சீனா திட்டமிடுகிறது.
-sm