ஜக்கர்த்தாவில் மோசமாகும் காற்றின் தரம்

இந்தோனேசியத் தலைநகர் ஜக்கர்த்தாவில் மோட்டார்வாகனங்கள் திடீர்ச் சோதனைக்கு உள்ளாக்கப்படவிருக்கின்றன.

அங்குக் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையின் அளவைச் சோதனை செய்யத் தவறுவோர், மீண்டும் மீண்டும் தவறு செய்வோர் ஆகியோரின் உரிமங்கள் மீட்டுக்கொள்ளப்படலாம்.

எப்போது நடவடிக்கை தொடங்கும்? எப்படி அது நடைமுறைப்படுத்தப்படும் என்பதுபற்றி அரசாங்கம் ஏதும் சொல்லவில்லை. பொதுச் சேவை ஊழியர்களில் பாதிப் பேரை வீடுகளில் இருந்தே வேலை செய்யும்படி உத்தரவிட ஜக்கர்த்தா நகர நிர்வாகம் பரிசீலிக்கிறது.

உலகில் காற்றுத் தூய்மைக்கேடு மோசமாகவுள்ள 10 நகரங்களின் பட்டியலில் ஜக்கத்தா இடம்பிடித்துள்ளது. மே மாதத்திலிருந்தே பட்டியலில் நீடிக்கும் அந்த நகரம், சென்ற வாரம் உலக அளவில் முதலிடத்தை எட்டியது.

மிதமிஞ்சிய போக்குவரத்து நெரிசல், நீண்ட காலம் தொடரும் வறண்ட பருவம், தொழிற்சாலைகள் முதலியவையே காற்றுத் தூய்மைக்கேட்டுக்குக் காரணங்கள் என்று இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ கூறினார்.

 

 

-sm