அன்வார் இப்ராகிம் பிரதமராவதற்கு தகுதியற்ற வேட்பாளர் என்று கடல்கடந்து வாழும் வலைப்பதிவர் ராஜா பெட்ரா கமாருடின் கூறினார். ரிபோமாசி காலத்தில் இவர் அன்வாரை தற்காத்தவர்.
உத்துசான் மலேசியாவின் வார இறுதி பதிப்பான மிங்குவான் மலேசியாவுக்கு அளித்த ஒரு சிறப்பு நேர்காணலில் அன்வார் அவரது சொந்தக் கட்சி பிகேஆரையும் அவர் ஆலோசகராக இருக்கும் சிலாங்கூரையும் நிருவகிக்கும் திறனற்றவர் என்று ராஜா பெட்ரா கூறினார்.
மேலும், ஒரு கட்டத்தில் அவரின் நண்பராக இருந்தவர் ஓரினப்புணர்ச்சியாளராக “இருக்கலாம்” என்று ராஜா பெட்ரா கூறினார்.
“அன்வார் ஓர் ஓரினப்புணர்ச்சியாளரா?” என்று யாராவது கேட்டால், ‘இருக்கலாம்’ என்று பதில் அளிப்பேன். ஆனால் அவர் பிரதமராக இருக்க முடியாது. அதுதான் உண்மைநிலை”, என்று கூறினார் ராஜா பெட்ரா. அவர் பெரித்தா ஹரியான், உத்துசான் மற்றும் நியு ஸ்டிரெட்ஸ் டைம்ஸ் ஆகியவற்றுடன் சமீபத்தில் சிங்கப்புரில் சந்திப்பு நடத்தியுள்ளார்.
அன்வார் மீதான குதப்புணர்ச்சி II வழக்கில் ஜனவரி 9 இல் தீர்ப்பளிக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இந்நேர்காணல் வெளியிடப்பட்டுள்ளது.
இம்முழு நேர்காணலிலும் அன்வார் ஓர் ஓரினப்புணர்ச்சியாளர் என்று ராஜா பெட்ரா நேரடியாக கூறவில்லை. ஒரு மனிதரின் பாலுறவு விருப்பங்கள் அவரைப் பற்றிய தம்முடைய கருத்துகளை மாற்றாது என்றும் அவர் கூறினார்.
எஸ்கேயின் தேன் வலை
ஆனால், ஆஸ்ட்ரேலியா போன்ற மேல்நாடுகளைப் போலல்லாமல், மலேசியாவில் பொதுமக்கள் சார்ந்த பதவிகளை நாடுபவர்கள் ஓரினப்புணர்ச்சியாளராக இருக்க முடியாது என்று அவர் விளக்கமளித்தார்.
“நீங்கள் ஓரினப்புணர்ச்சியாளராக இருக்க விரும்புகிறீர்களா? தாராளமாக செய்யுங்கள். (ஆனால்) நீங்கள் தலைவராகவும் அதேவேளையில் ஓரினப்புணர்ச்சியாளராகவும் இருக்க முடியாது. ஆஸ்ட்ரேலியாவில், அது முடியும். நீங்கள் அமைச்சராகவும் ஓரினப்புணர்சியாளராகவும் இருக்கலாம். மலேசியாவில், ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்”, என்றாரவர்.
ராஜா பெட்ராவை போலல்லாமல், பேட்டி கண்டவர்கள் அன்வாரின் “நன்னெறி பிரச்னைகள்” பற்றி சாடையாகக் குறிப்பிட்டனர். அதில் சைபுல் பாதிக்கப்பட்டவர் மற்றும் பிகேஆர் தலைவர் அன்வார் அந்த “ஒமிகா கடிகார” சம்பவம் குறித்து பேச மறுத்து விட்டதும் அடங்கும்.
சைபுல் குறித்த கேள்வியைத் தவிர்த்துவிட்ட ராஜா பெட்ரா, அந்த மூன்று டத்தோ டி ஒருவரான எஸ்கே ஷாரீல் அப்துல்லா, அன்வாரை ஏற்பாடு செய்து அந்தக் காதல் சந்திப்பை வீடியோவில் பதிவு செய்து விட்டார்.
“அந்த தேன் வலையில் அவர் (அன்வார்) சிக்கவைக்கப்பட்டார் என்று நான் நம்புகிறேன்”, என்றார் ராஜா பெட்ரா.
ராஜா பெட்ரா அந்த ஒமிகா கடிகாரம் குறித்து எதுவுமே கூறவில்லை. அக்கடிகாரத்தை அன்வாரின் உத்தரவுப்படி தான் அக்காதல் சந்திப்பு நடந்த அறையிலிருந்து எடுத்துவிட்டதாக எஸ்கே கூறியிருந்தார்.
அன்வார் உருவாக்கிய “அரக்கன்”
அக்கடிகாரம் அன்வாரிடமிருந்தால் அதனைக் காட்டுமாறு எஸ்கே அவருக்கு சவால் விட்டார். ஆனால், அவ்வாறு செய்ய அன்வார் மறுத்து விட்டார்.
அக்கடிகாரம் குறித்து இருமுறை கேட்கப்பட்டும், ராஜா பெட்ரா அது பற்றி எதுவும் கூறவில்லை.
ராஜா பெட்ராவை பொருத்தவரையில், அவர் குதப்புணர்ச்சி II வழக்கு குறித்து அக்கறை கொண்டிருக்கவில்லை. ஆனால், அன்வாருக்கு பின்னர் மாற்றங்களைக் கொண்டுவதற்கான சிவில் உரிமைகள் இயக்கத்தின் மீது கவனம் செலுத்த அவர் விரும்புகிறார்.
சிலாங்கூர் மாநில பொருளாதார ஆலோசகர் என்ற முறையில் அன்வார் தோல்வி கண்டுள்ளார். அங்கு பெரும் மாற்றங்கள் ஏதும் காணப்படவில்லை. ஆனால், மாறாக ஊழல் பின் நிருவாகத்தின் போது இருந்த அதே அளவில் இருக்கிறது என்று அவர் நம்புகிறார்.
“அன்வார் கூறினார்: ‘கூட்டங்கள் நடக்கும் சமயங்களில், (மந்திரி புசார்) காலிட் (இப்ராஹிம்) அகங்காரமாக சொல்வதைக் கேட்க மாட்டார். அவரைக் கட்டுப்படுத்த முடியாது.’ என்னைப் பொறுத்தவரையில் நீர்தான் அவரை தேர்வு செய்தவர். அவரால் செயல்பட இயலவில்லை.
“இப்போது உமக்கு அவருடன் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன – அகங்காரமும் வீண் பிடிவாதமும் உள்ளவர் – என்ன செய்யப் போகிறீர்? நீர் ஓர் அரக்கனை உருவாக்கினீர்”, என்று ராஜா பெட்ரா கூறினார்.
அகண்ட காட்சி
சிலாங்கூர் மாநில பொருளாதார ஆலோசகராக அன்வார் நியமிக்கப்பட்டதை பொதுமக்கள் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
“பொருளாதார ஆலோசகர் என்ற முறையில் கடந்த மூன்று ஆண்டுகளில் என்ன ஆலோசனை வழங்கியுள்ளீர்? கடந்த மூன்று ஆண்டுகளில் அவர் வெளிநாடுகளுக்கு 60 தடவை சென்றுள்ளார்.
“அவர் மாநிலத்தை நிருவாகிப்பதோடு, கட்சி சம்பந்தப்பட்ட கடமைகளை ஆற்றுவதோடு, பக்கத்தானையும் நிருவாகிக்க வேண்டும். பக்கத்தான் இப்போது அலங்கோலமான நிலையில் இருக்கிறது”, என்றாரவர்.
அவர் நடத்தி வரும் மலேசியா டுடே வலைத்தளம் இப்போது அன்வாரை சாடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதா என்ற வினாவுக்கு, தமது தற்போதைய நடவடிக்கை உய்த்துணர்கிற மக்களின் கவனத்தை மீண்டும் வகைப்படுத்துவதான் என்று அவர் தெரிவித்தார்.
“மக்கள் அகண்ட காட்சியைக் காண வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் மாற்றத்தைக் காண விரும்புகிறோம். இது எதைப் பற்றியது, அன்வாரா அல்லது நாடா? அன்வார் ஒரு காரணியாக இருக்கலாம். ஆனால், அவர் முக்கியமான ஒரு குறிக்கோள் அல்லர்.
“மக்கள் எளிதாக கவனத்தை மாற்றிகொள்வர். அவர்கள் தொந்தரவுபடுத்தப்படுவதாக உணர்கின்றனர். சில சமயங்களில் அவர்கள் இலக்கை விட்டுவிடுவதுடன் தவறான பாதையில் செல்கின்றனர்… அன்வாருக்கு தீங்கிழைக்கப்பட்டிருந்தால், நாம் அவருக்காகப் போராடுவோம்.
“ஆனால், இந்த நாட்டை அன்வாருக்காக போராடுமாறு கோராதீர்கள் ஏனென்றால் இந்த நாடு அதன் நலன்களுக்காகப் போராட வேண்டும்”, என்றார் ராஜா பெட்ரா.