உக்ரேனின் செர்னிஹிவில் ரஷ்யாவின் எறிபடைத் தாக்குதல் – குழந்தை உட்பட 7 பேர் மரணம்

உக்ரேனின் செர்னிஹிவ் நகரில் ரஷ்யாவின் எறிபடைத் தாக்குதலில் 6 வயதுக் குழந்தை உட்பட 7 பேர் மாண்டனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அவர்களில் 25 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று செர்னிஹிவின் தற்காலிக மேயர் கூறினார்.

செர்னிஹிவ் நகரின் முக்கியச் சதுக்கத்தில் தேவாலயம் செல்வதற்காக மக்கள் வரிசையில் நின்றபோது எறிபடை பாய்ந்தது. செர்னிஹிவ் வட்டாரத்தின் முக்கியமான அரங்கின் கூரை மோசமாகச் சேதமடைந்திருக்கும் காணொளியை உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார்.

சன்னல்கள் சிதறி, சதுக்கத்தில் சிதைவுகள் குவிந்திருக்கின்றன. உடல்கள் கிடப்பதையும் காண முடிகிறது. ரஷ்யா முழுவீச்சில் படையெடுப்பைத் தொடங்கியபோது மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்று செர்னிஹிவ். ரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள உக்ரேனியக் குடியிருப்புகளைப் போலவே செர்னிஹிவ் நகரிலும் ஆளில்லா வானூர்தி அல்லது எறிபடைத் தாக்குதல் நடத்தப்படுகிறது. செர்னிஹிவ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதல் மிகுந்த கவலையளிப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்துலகச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் மீதோ அவர்களின் உடைமைகள் மீதோ தாக்குதல் நடத்த அனுமதியில்லை.

அத்தகைய தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்று உக்ரேனுக்கான ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைவர் டெனிஸ் பிரௌன் கூறினார். செர்னிஹிவ் நகரில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

 

 

-sm