தாக்கப்பட்ட மாணவர்: போலீஸ்காரர் பொய் சொல்லச் சொன்னார்

தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரீஸ் கல்விப் போதனை பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 17 மாணவர்களில் ஒருவரை அவருடைய காயம் கீழே விழுந்ததால் ஏற்பட்டது என்று ஓர் ஆவணத்தில் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

பெபாஸ் என்ற அமைப்பின் தலைவர் முகம்மட் ஷாப்வான் அனாங்கை மருத்துவமலையில் ஒரு போலீஸ் படம்பிடிப்பாளர் படங்கள் எடுத்தப் பிறகு அவரை ஓர் ஆவணத்தில் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

அச்சம்பவத்தை அவர் பின்னர் எஸ்எம்எம் அமைப்பின் தலைவர் அஹமாட் சூகிரி அப்துல் ரஸாப் மற்றும் வழக்குரைஞர் என். சுரேந்திரன் ஆகியோரிடம் இன்று அவரது மருத்துவமனை படுக்கையிலிருந்து விளக்கினார்.

“படங்களை எடுத்தப் பின்னர், அந்த போலீஸ் பணியாளர் ஷாப்வானை ஒரு பாரத்தில் கையெழுத்திடுமாறு கூறினார். அதில் ‘Mangsa jatuh semasa kejadian’ (பாதிக்கப்பட்டவர் அச்சம்பவத்தின் போது கீழே விழுந்தார்'”, என்று எழுத்தப்பட்டிருந்ததாக தொடர்பு கொண்டபோது சுரேந்திரன் கூறினார்.

ஷாப்வான் பலவீனமாக இருந்தபோதிலும், அந்த ஆவணத்தில் கையெழுத்திடுவதற்கு மாறாக அதனை அவரால் கிழித்தெரிய முடிந்தது. ஆனால் அதை ஒரு சாட்சியப் பொருளாக அவரால் வைத்துக்கொள்ள முடியவில்லை. அது எடுத்துச் செல்லப்பட்டது என்று சூகிரி மலேசியாகினியிடம் கூறினார்.