மாநிலச் சட்டமன்ற தேர்தல்களில் தோற்றவர்கள் மக்கள்தான் – கி.சீலதாஸ்

ஆறு மாநிலச் சட்டமன்றங்களுக்கான தேர்தல் முடிந்துவிட்டது. பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வர் இபுராஹும் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பான் மூன்று மாநிலங்களிலும், டான் ஶ்ரீ முகைதீன் யாசீன் தலைமையிலான பெரிக்கத்தான் நேஷனல் மூன்று மாநிலங்களிலும் ஆட்சி மக்கள் வாக்காளர்களின் ஆணையைப் பெற்றுள்ளன.

இந்தத் தேர்தல் முடிவுகள் நடுவண் ஆட்சியின் திடநிலையைக் குலைக்கவல்லது அல்ல என்ற நம்பிக்கை இருப்பினும் பெரிக்கத்தான் நேஷனல் வடக்கு மாநிலங்களான கெடா, கிளாந்தான், திரங்கானு ஆகியவற்றில் அடைந்திருக்கும் வெற்றி சாதாரணமானதாகக் கருதுவது பொருத்தமான கருத்தல்ல. அதே சமயத்தில், நெடுங்காலமாக மலேசிய அரசியல் தம்மை கவிழ்க்க முடியாது என வீறுநடை போட்ட அம்னோ தமது செல்வாக்கை இழந்துவிட்டதையும் காண முடிகிறது. (இந்தச் சரிவுக்கான காரணம் என்ன?)

மலாய் தேசியம்

இந்தத் தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு பெரிக்காத்தான் நேஷனலும், ஜனநாயகச் செயல் கட்சியைத் தவிர்த்த மற்ற பக்கத்தான் கட்சிகள் மலாய்க்காரர் ஒற்றுமை அரசை அமைக்க வேண்டுமெனச் சில மலாய் தேசியத்தைப் பின்னணியாகக் கொண்ட இயக்கங்கள் கோரிக்கை விடுவதைக் கவனிக்க வேண்டும்.

முதலில் இந்த மாநிலச் சட்டமன்றங்களுக்கான தேர்தல் எதை உணர்த்துகிறது என்பதைப் பார்ப்போம். இன அடிப்படையில் வாக்களிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இன அரசியலை வளரவிட்ட பொறுப்பை அம்னோ ஏற்றுக்கொள்ள வேண்டுமெனச் சொன்னால் அது தவறல்ல.

அரசியலாகும் சமயம்

இதில் சமயமும் இணைக்கப்பட்டதால் துன் டாக்டர் மகாதீர் பிரதமராகப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து அவர் மேற்கொண்ட அரசியல் அணுகுமுறை, அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் யாவரும் இன அரசியல் வேரூன்ற காரணிகளாக இருந்தார்கள் என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதுவே அம்னோவின் அசைக்க முடியாத, அது விட்டுக்கொடுக்காத கொள்கையாக இருந்தது.

இன்று ஜனநாயகச் செயல் கட்சியை ஒதுக்கிவிட்டு மலாய்க்காரர்கள் ஒற்றுமை ஆட்சி அமைக்க வேண்டுமெனக் கோருவோர் நாட்டின் எதிர்காலத்தை, அதன் சுபிட்சத்தை, எல்லா இன மக்களின் – மலேசியர்களின் நலனில் கரிசனம் கொண்டவர்களாகத் தென்படவில்லை.

பெரிக்கத்தான் நேஷனலின் கொள்கை என்ன? முகைதீனை எடுத்துக்கொண்டால் மலாய்க்காரர்கள் மட்டும் ஆட்சி செய்ய வேண்டும் என்பதாகும். மகாதீரின் போக்கு என்ன?

மலேசியா பல்லின மக்கள் கொள்கையை எதிர்க்கும் ஆட்சியாகும். டான் ஶ்ரீ ஹாடி அவாங்கின் நிலை என்ன? எல்லாமே மத ரீதியில் பார்க்க வேண்டும். நாட்டு நிர்வாகமே அவ்வாறே அமைந்திருக்க வேண்டுமென முகைதீனும் ஹாடியும் ஊழலுக்குச் சாவு மணி அடிப்பதைவிட அதற்குப் புது அர்த்தம் தருவதில்தான் கவனம் எல்லாம்.

மகாதீரின் இனவாதம்

மகாதீரோ ஊழலைப் பற்றி பேசுவதோ, எதிர்ப்பதோ கிடையாது. இனப் பகைமையை வளர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்துகிறார். இவர்களின் ஒட்டுமொத்த கொள்கைகளும், பேச்சுகளும், நடவடிக்கைகளும் சிறுபான்மையினரை வெகுவாகப் பாதிக்கும் என்பது உண்மை. இந்தச் சமயத்தில் மலாயாவின் சுதந்திரம்  அடைந்ததில் இருந்து சிறுபான்மையினரின் எவ்வாறு தேசிய அளவில் உயர்ந்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும் அல்லவா?

பெரிக்கத்தான் நேஷனல் மூன்று மாநிலங்களில் கண்டிருக்கும் வெற்றி பெரிதுப்படுத்த முடியாது ஏனெனில் அவை பாரம்பரியமாகப் பாஸ் கட்சியின் அரண்களாக இயங்கின என்கிறார்கள். கெடா அம்னோவின் பொக்கிஷமாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

மற்ற மாநிலங்களான பினாங்கு, பேராக், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களை பெரிக்கத்தான், ஹரப்பான் தக்கவைத்துக் கொண்ட போதிலும் பெரிக்கத்தான் நேஷனல் பெற்றிருக்கும் வாக்குகள் சிந்திக்கச் செய்கிறது.

ஒரு சில கணிப்புகளின் படி இந்தியர்களின் வாக்கு பெரிக்கத்தான் நேஷனலுக்குக் கணிசமான அளவில் விழுந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தாலும் வாக்கு கணிப்பைச் செய்யும்போது இனவாரியாகப் பிரித்துப் பார்ப்பது முறையில்லா பழக்கமாகவே கருத வேண்டியுள்ளது. இவ்வாறு இனவாரியாகப் பிரித்துப் பார்ப்பது பல்லின இணக்கத்துக்கு உதவாது என்றும் சொல்லலாம்.

சிறுபான்மையினரின் சிக்கல்

சிறுபான்மையினரின் வாக்களிப்பு மனநிலை எப்படி இருந்தது என்றும் துல்லியமாகக் கூற இயலாது. அதே சமயத்தில், அவர்களின் வாக்கு பயனற்று என்று நினைக்கிறார்களா? இல்லை அடிப்படை சலுகையில் கிடைக்காததால் தேர்தலில் கரிசனம் குறைந்ததா?

அதே வேளையில், சிறுபான்மையினர் முன்பு எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதை ஆய்ந்துப் பார்க்காது செயல்பட்டால், தீங்கு நேர்ந்தால் அதை அனுபவிக்க வேண்டியவர்களும் வாக்காளர்களே! அந்த வாக்காளர்கள் யார்? இதற்கான விடையை அறிந்து கொள்ளாமல், அறிந்து கொள்ள முற்படாமல் வாழ்ந்தால் பாதிப்படைவது வாக்காளர்கள்! அந்த வாக்காளர்கள் யார்?

இந்தத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் வெற்றி கண்டிருக்கும் பெரிக்கத்தான் நேஷனல் இனவாரியாக மக்களைப் பிரித்து ஆட்சி நடத்த தீர்மானித்துவிட்டதைக் காணும்போது, அந்தப் பிரிவினைச் சக்திகளுக்கு இடம் தந்தால் அழியப்போவது நாடே!

அது ஒரு புறமிருக்க, மற்ற மூன்று மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் பக்கத்தான் ஹரப்பான் தமக்கு விடுக்கப்பட்டிருக்கும் சவாலை நன்கு கவனத்தில் கொண்டு மக்கள் பலன் பெறும் திட்டங்களை வகுத்து அமல்படுத்துவதோடு எல்லா இன மக்களும் சுபிட்சமாகவும், அந்நியோன்யமாகப் பழக, வாழ வழி காண வேண்டும்.

ஜனநாயகச் செயல் கட்சி

இன்று பக்கத்தானும், பெரிக்கத்தானும் வெற்றி கண்டுவிட்டதாக மகிழ்ச்சி அடைவது சரியல்ல. இந்த வெற்றியை ஒர் எச்சரிக்கையாகக் கருதி செயல்படுவதே நாட்டை இன, சமய வாதத்தில் இருந்து காப்பாற்ற மேற்கொள்ளப்படும் நற்செயலாகக் கருதப்படும்.

எனவே, பிரதமர் அன்வர் இபுராஹீம் அடுத்த கட்ட நடவடிக்கையாக நாட்டில் நல்லெண்ணம், இன, சமய சகிப்புத்தன்மை வளர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதில் மிகுந்த கவனம் தேவை.

ஜனநாயகச் செயல் கட்சி மீது பெரும் வெறுப்புணர்வை முகைதீன், மகாதீர், ஹாடி கொண்டிருப்பதில் எந்த நியாயமும் அர்த்தமும் இருப்பதாகத் தென்படவில்லை. அக்கட்சி சிறுபான்மை சமுதாயத்தினரைப் பிரதிநிதிப்பதாக நினைத்தாலும் அது இயங்குவதால், அதோடு ஒத்துழைப்பதால் அணைத்துச் செல்வதே நீண்ட கால அனுகூலங்களுக்கு உதவும்.

அதுதான் மலேசியாவின் நலனை விழையும் அரசியல் கட்சிகளின் நோக்கமாக இருக்க வேண்டும். இதுதான் அவர்கள் மலேசியாவுக்கும் அதன் வாக்காளர்களுக்கும் நிறைவேற்ற வேண்டிய கடமை.

சமீபத்தில் கிடைத்த வெற்றியை வைத்துக் கொண்டு மகிழ்வில் மட்டும் ஆழ்ந்திருந்தால் இந்த வெற்றி பெரு முயற்சியால் அடையப்பெற்ற வெற்று வெற்றியாக மாறிவிடுமா?

சுருக்கமாகச் சொன்னால் நடந்து முடிந்த ஆறு மாநிலச் சட்டமன்ற தேர்தல் நல்ல மலேசியர்களின் எண்ணத்தில் மண்ணைப் போட்டுவிட்டது என்றால் மிகையாகாது. மலேசியர்கள் என்ற உணர்வு கொண்ட மக்கள்   தோற்றார்கள். அது நடந்திருக்கக்கூடாது.