மாணவர் கூட்டமொன்று தஞ்சோங் மாலிமில் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தைக் கலைக்க போலீஸ் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டது ஒரு “தேசிய துயரம்” என்று வருணித்த பெர்லிஸ் முன்னாள் முப்தி முகம்மட் அஸ்ரி சைனல் அபிடின், அது ஒரு கொடுங்கோல் அரசாங்கத்தின் அடையாளமுமாகும் என்றார்.
“ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அடித்துக்காயப்படுத்தப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
“அவர்களைத் தாக்கியவர்கள் போலீசார்தான் என்பது நிறுவப்படுமானால், இது நாட்டுக்கு நேர்ந்த ஒரு துயரம்தான்”, என்று துணிச்சலுக்குப் பெயர்பெற்ற அந்த முப்தி, நேற்று பிரிட்டனிலிருந்து வழங்கிய புத்தாண்டுச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
“மாணவர்கள் தங்கள் மனக்குறைகளை எடுத்துரைக்க இடமளிக்கப்பட வேண்டும். அவர்கள் தொல்லைப்படுத்தப்படுகிறார்கள், காயப்படுதப்படுகிறார்கள் என்றால் அது அரசு கோடூரமானது என்பதற்கு அடையாளமாகும்.”
மாணவர்களின் கருத்துகளை அதிகாரிகள் ஏற்க வேண்டும் என்ற அவசியமில்லை ஆனால், அங்கு போலீசாரின் நடவடிக்கை “முறையானதல்ல” என்று அஸ்ரி குறிப்பிட்டார்.
“கைது செய்ய விரும்பினால் முறைப்படி கைது செய்யுங்கள், அவர்களைத் தாக்கியிருக்ககூடாது.”
மாணவர்களை ஒடுக்க நினைப்பது அதிகாரிகளுக்கு எதிராக வெறுப்பைத்தான் மேலும் தூண்டிவிடும் என்றாரவர்.
“டூனிசியாவில் நடந்ததை நினைத்துப்பாருங்கள்”, என்று குறிப்பிட்ட அஸ்ரி, அச்சம்பவத்தை விசாரிக்க ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றார்.