சீனாவில் கன மழையால் வெள்ளப்பெருக்கு, ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

சாயோலா புயல் தென் சீனக்கடல் வழியாக சென்றுள்ளதால் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என சீன அரசு தெரிவித்துள்ளது.

சீனாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாமல் மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பல மாகாணங்களில் இன்று கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக வடமேற்கு ஹுனான் மாகாணத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வார இறுதியில் சாங்ஜி, ஷிமென் மற்றும் யோங்ஷுன் மாவட்டங்கள் மற்றும் ஜாங்ஜியாஜி நகரங்களில் கனமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அங்கிருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சாங்ஜியில் இந்த ஆண்டு அதிக அளவு மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சனிக்கிழமை மாலை முதல் ஞாயிறு வரையிலான ஒரே இரவில் 256 மி.மீ வரை மழை கொட்டித்தீர்த்தது. 1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த அளவிற்கு அதிக மழைப்பொழிவு இருந்ததாக சீன மத்திய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

சாயோலா புயல் தற்போது தென் சீனக்கடல் வழியாக சென்றுள்ளதால் மழை வெள்ளம் அதிகரிக்கலாம் என்றும், அதனால் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சீன அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த புயல் வெள்ளிக்கிழமை குவாங்டாங் மாகாணத்தில் கரையைகடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

-dt