ஜோகன்னஸ்பர்க் நகரில் பயங்கர தீ விபத்து – 73 பேர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 73 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள ஐந்து அடுக்கு கட்டிடம் ஒன்றில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களிலேயே தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியதில் உள்ளே இருந்தவர்களால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை.

இந்த தீ விபத்தில் இதுவரை 73 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்களில் குழந்தைகளும் அடக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் கடும் தீக்காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நகரத்தின் மையத்தில் இருக்கும் விபத்து நடந்த மார்ஷல்டவுன் பகுதி, பராமரிக்கப்படாத பழைய கட்டங்கள் நிறைந்துள்ள பகுதி என்று கூறப்படுகிறது. இந்த கட்டிடங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

தீயை நீண்டநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். தற்போது இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கும் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தீவிபத்தில் இறந்தவர்களுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

 

-th