தம்மை விமர்சனம் செய்வோரைச் சாடுகிறார் RPK

அம்னோ தொடர்புடைய செய்தித்தாள்களுக்கு நேர்காணல் வழங்கிய தம்மைக் குறை கூறுவோரைச் சாய்வு நாற்காலியில் சுகமாக சாய்ந்துகொண்டு விமர்சனம் செய்யும் கூட்டத்தினர் என்று நாடுகடந்து வாழும் வலைப்பதிவரான ராஜா பெட்ரா கமருடின் கேலி செய்துள்ளார்.

நாட்டின் மேன்மைக்காக பாடுப்படும் சிறுபான்மை மக்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு மட்டுமே தாம் முக்கியத்துவம் அளிப்பதாக, நேற்றிரவு மலேசியா டுடே வலைப்பதிவில் ராஜா பெட்ரா கூறியிருந்தார்.

இந்தப் பகுப்புக்குள் வருபவர்கள் யார்யார் என்றால், 2008-இல் மாற்றரசுக் கட்சிக்கு வாக்களித்த நான்கு மில்லியன் வாக்காளர்கள், வாக்களிப்பதற்காகவே நாட்டுக்குத் திரும்பிவந்த வெளிநாடுவாழ் மலேசியர்கள், யுனிவர்சிடி பெண்டிடேகான் சுல்தான் இட்ரிஸ் (யுபிஎஸ்ஐ) ஆர்ப்பாட்டக்காரர்கள், வி ஃபோர் மெர்டேகா ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள், வலைப்பதிவுகளில் சொந்தப் பெயரில் கருத்துத் தெரிவிப்பவர்கள் ஆகியோராவர்.

பிஎன்னுக்கு வாக்களித்தவர்கள் எதுவும் செய்யாதவர்கள் என்று கூறிய ராஜா பெட்ரா, அவர்களும் வலைத்தளங்களில் புனைப்பெயரில் எழுதுவோரும் இரண்டாம் வகையினராவர் என்றார்.

“முதல் வகையினர் என்றால் அவர்கள் சொல்லும் கருத்தை மதிப்பேன். இரண்டாம் வகையினர் என்றால் சொல்லும் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடேன்.

“முதல் வகையினர் தெரிவிக்கும் கருத்துகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் உண்டு. அதில் இடம்பெறாதவரா, அவரின் கருத்துக்கு முக்கியத்துவம் இல்லை.

“இப்போது கருத்துத் தெரிவிக்கும் ஏறத்தாழ எல்லாருமே இந்த வகையைச் சேர்ந்தவர்கள்தாம்”, என்றவர் கடைசியில் ஒரு பொடி வைத்திருந்தார்.

நேற்று, அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவின் ஞாயிறு பதிப்பான மிங்குவான் மலேசியா, பெரித்தா ஹரியான், த நியு ஸ்டிரேய்ட்ஸ் டைம்ஸ் ஆகியவை ராஜா பெட்ராவுடன் நடத்தப்பட்ட நேர்காணலை வெளியிட்டிருந்தன.அண்மையில் சிங்கப்பூரில் நடத்தப்பட்ட நேர்காணல் அது.

அதில்,  ராஜா பெட்ரா, அன்வார் இப்ராகிமுக்குப்  பிரதமராகும் தகுதி இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
ஏனென்றால், கடந்த மூன்றாண்டுகளில் கட்சியையோ பிகேஆர்-வசமுள்ள சிலாங்கூரையோ வழிநடத்தும் திறன் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது என்றாரவர்.

அன்வார் குதப்புணர்ச்சியில் ஈடுபாடு உள்ளவராக என்று யாராவது தம்மை வினவினால், “இருக்கலாம்” என்றுதான் சொல்வேன் என்றும் அவர் கூறிக்கொண்டார்.

கடந்த மார்ச்சில், டத்தோ டி மூவர் கும்பலால் ஆடம்பர தங்குவிடுதி ஒன்றில் பதிவுசெய்யப்பட்டதாகக் கூறப்பட்டு திரையிட்டுக் காண்பிக்கப்பட்ட செக்ஸ் வீடியோவில் இருக்கும்  ஆடவர் அன்வார்தான் என்பதில் தாம் “90 விழுக்காடு” உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டது பக்காத்தான் ரக்யாட் ஆதரவாளர்கள் பலருக்கு மிகுந்த ஆத்திரத்தை மூட்டியது.

மலேசியர்கள் சீரமைப்புகளுக்காக, சிவில் உரிமை இயக்கங்களில் சேர்ந்து தொடர்ந்து போராட வேண்டும் என்று வலியுறுத்திய ராஜா பெட்ரா, அவர்கள் அன்வாருக்கு அப்பாலும் பார்க்க வேண்டும் என்றார்.