கோயில் நிலத்தை அபகரித்தது இந்து அறவாரியம்

ஏற்கனவே சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருக்கும் பினாங்கு 2-ம் முதலமைச்சர் பி.ராமசாமி, புத்தாண்டு பிறந்துள்ள வேளையில் பட்டர்வர்த் இந்துகளின் சினத்துக்கு ஆளாகியுள்ளார்.

இன்று பட்டர்வர்த்தில், பல கோயில்களைப் பிரதிநிதித்து சுமார் 30 பக்தர்கள், ராமசாமி ஆலயங்களுக்கு சொந்தமான நிலங்களை இந்து அற வாரியம் தனியார் வியாபாரத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார் என்று கூறி அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
“எங்கள் உரிமைகளை இந்து அறவாரியம் பறித்துகொண்டது. அதன் தலைவர் ராமசாமி பதவி விலக வேண்டும்” , “பினாங்கு டிஏபி அரசு இந்தியர் நிலத்தில் ஆக்கிரமிப்பு” என்று கூறும் பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

“54-ஆண்டுகள் பிஎன் ஆண்டது. பிரச்னை இல்லை; மூன்றாண்டுகள் பிஆர் ஆட்சியில் மூன்றாம் ஆண்டிலேயே பிரச்னைகள் வந்துவிட்டன”, என்றவர்கள் கூறினர்.

நிர்வாகத்தில் திறமை, பொறுப்புடைமை, வெளிப்படைத்தன்மை என்று கூறுவதெல்லாம் என்னவாயிற்று என்றும் அவர்கள் வினவினர்.

சில பாதாகைகள், “எங்களுக்கு இந்து அறவாரியம் தேவையில்லை”, “இந்தியர் நிலங்களை இந்தியர்களிடமே திருப்பிக் கொடுங்கள்”, என்று கூறின.

அக்குழுவினர், சிறுவர்கள் பலரும் அதில் இடம்பெற்றிருந்தனர், ஜாலான்  சீராமுக்கு அப்பால் உள்ள  ஸ்ரீகங்காதரன் சிவபெருமான் ஆலயத்துக்குச் சொந்தமான திடலில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்த ஆலயம் ராமசாமி தலைவராகவுள்ள இந்து அறவாரியத்தின் பார்வையில் உள்ளது.

கடந்த மாதம், ராமசாமி “திமிராக நடந்துகொண்டு” அந்த வட்டார மக்களை ஆலோசனைக் கலக்காமலேயே, ஆலயத்துக்குச் சொந்தமான நிலத்தை எடுத்து பழைய கார்களை விற்பனை மற்றும் கார் கழுவும் தொழில் செய்யும் ஒரு நிறுவனத்துக்குக் கொடுத்து விட்டார் என்று ஜாலான் மெங்குவாங் பேச்சியம்மன் ஆலய அறங்காவலர்களில் ஒருவரான ஏ.ராஜன் கூறினார்.

இதற்குமுன் ஆலயத்துக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தின் சில பகுதிகள் தனியார் வியாபாரிகளுக்குக் கொடுக்கப்பட்டுப் பின் அவற்றைத் திரும்பப் பெறுவது பெரும்பாடாக போயிற்று என்றாரவர்.

இவ்விவகாரத்தை பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.தனசேகரன் கவனத்துக்குக் கொண்டு சென்றதாகவும் ஆனால் தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என்றும் ராஜன் கூறினார்.

“கடந்த முறை நாங்கள் ராமசாமியை அழைத்தபோது குடிபோதையில் இருப்பதுபோல் பேசினார். மரியாதைக் குறைவாக நடந்துகொண்டார். தனியாருக்கு நிலம் கொடுக்கப்பட்டது பற்றிப் பேச வேண்டாம் என்றார்”, என்று ராஜன், 59, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“இந்து அறவாரியம் ஆலயச் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால், இங்கு அதுவே ஆக்கிரமிப்பாளராக மாறி விட்டது”, என்றவர் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தைத் தீர்வுகாண ராமசாமிக்கும் பினாங்கு மாநில அரசுக்கும் ஒருவாரம் அவகாசம் அளிப்பதாகவும் தவறினால் ஆலயத்தின் பக்தர்கள் அதனை மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்வர் என்றும் ராஜன் கூறினார்.

விவகாரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லவும் தயாராக இருப்பதாக அவர் சொன்னார்.

அந்நிலம், தைப்பூசத் திருவிழாவின்போதும் ஆலயத்தின் பல்வேறு நடவடிக்கைகளுக்கும் பெரிதும் பயன்பட்டு வந்தது என்று ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டவர்களில் ஒருவரான ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத் தலைவர் கே.ஜெகன்னாதன் கூறினார்.

“எங்கள் நடவடிக்கைகளுக்கென்று இருக்கும் ஒருசில இடங்களில் இதுவும் ஒன்று. அரசு எங்களுக்கு நிலம் கொடுப்பதில்லை.அதேபோல், ஆலயத்தின் நிலத்தை எடுத்துக்கொள்ளவும் கூடாது”, என்று ஜெகன்னாதன் குறிப்பிட்டார்.

“தைப்பூசத்தின்போது 5,000-த்திலிருந்து 6,000பேர்வரை இந்த நிலத்தைப் பயன்படுத்திக்கொள்வார்கள். எனவே, இந்த நிலத்தையும் எடுத்துக்கொண்டால் நாங்கள் செல்ல வேறு இடம் இல்லை”,என்றாரவர்.

ஆலய பக்தகோடிகளில் ஒருவரான எஸ்.ராஜசேகர், ஆர்ப்பாட்டத்தில் பல கட்சியினர் கலந்துகொண்டாலும்கூட ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தது எந்தவோர் அரசியல் கட்சியும் இல்லை என்றார்.

ஆர்ப்பாட்டம், டிஏபி அல்லது மாநில முதல்வர் லிம் குவான் எங்குக்கு எதிரானது அல்ல என்று குறிப்பிட்ட ராஜசேகர், லிம் ஒரு “நல்ல மனிதர்” என்றார்.

“பக்காத்தான் ஆட்சிக்கு வந்த மூன்றாண்டுகள்தான் ஆகின்றன.அதற்குள் ஆலயச் சொத்துக்களைப் பறித்துக்கொண்டுள்ளது. இந்த நிலம் ஆலயத்துக்குச் சொந்தமானது. இந்து அறவாரியத்துக்குச் சொந்தமானதல்ல”, என்று ராஜசேகர் கூறினார்.

இதனிடையே, ராமசாமி, அந்நிலம் இந்து அறவாரியத்துக்குத்தான் சொந்தமானது என்றும் அக்குழுவினருக்கு அதில் தலையீட்டுரிமை இல்லை என்றும் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் எவரும் தம்மைத் தொடர்புகொள்ளவில்லை என்றும் அவர் சொன்னார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் எவருடனும் பேசியதில்லை என்று கூறிய ராமசாமி, தம்மை அவர்கள் திமிரானவர் என்று கூறியிருப்பது கண்டு அதிர்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டார்.

“இது பொது நிலமல்ல. அறவாரியத்துக்குச் சொந்தமான நிலம். அவர்கள் என்னைத் தொடர்புகொண்டதில்லை; நானும் அவர்களுடன் பேசியதில்லை”, என்றாரவர்.