மாணவர்: நண்பனுக்கு உதவச் சென்றபோது தாக்கப்பட்டேன்

நேற்றுக் காலை, யுனிவர்சிடி பெண்டிடேக்கான் சுல்தான் இட்ரிசில் (யுபிஎஸ்ஐ) போலீசாரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவர், ஒரு நண்பனுக்கு உதவ முயன்றபோது தம் உதட்டில் அடி விழுந்ததாகக் கூறினார்.

சிலிம் ரிவர் மருத்துவ மனையிலிருந்து இன்று சிகிச்சை முடிந்து வெளிவந்த முகம்மட் சப்வான் அனாங்  ஒரு நண்பன் “போலீசாரால் இழுத்துச் செல்லப்படுவதை”ப் பார்த்து உதவச் சென்றபோது தாம் தாக்கப்பட்டதாகக் கூறினார்.

“நான் போலீசாருடன் சண்டையிடவில்லை. போலீசாரால் இழுத்துச் செல்லப்பட்ட ஒரு நண்பனுக்கு உதவச் சென்றேன்”, என்று இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் சப்வான் கூறினார்.

சக்கர நாற்காலியில் அமர்ந்து, பலவீனமாகக் காணப்பட்ட அவரை அவரின் மனைவிதான் செய்தியாளர் கூட்டத்துக்குக் கொண்டு வந்திருந்தார். அதிகாலையில் போலீசாருடன் நிகழந்த மோதலில் முதலில் முகத்தில் குத்தப்பட்டதாகவும் பின்னர் முழங்காலால் இடுப்பு எலும்புகளில் மோதினார்கள் என்றும் அந்த மலாயாப் பல்கலைக்கழக மாணவர் கூறினார்.

அம்மாணவரின் குடும்பத்தினர், அவரின் வீரதீரமிக்க செயலைக் கண்டு பெருமிதம் கொள்வதாகக் கூறினர்.

அவரின் செயல், எல்லாப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஒரு முன்மாதிரி என்று அவரின் மாமியார் மரியம் அப்துல் ரசீட், 50, கூறினார்.

“அவருடைய துணிச்சல் கண்டு, இப்படி ஒரு மகளும் மருமகனும் இருப்பதை எண்ணிப் பெருமை அடைகிறேன். (உரிமை காக்க) மேலும் பல பல்கலைக்கழக மாணவர்கள்  எழுச்சி பெற வேண்டும்”, என்றாரவர்.