பூமியில் வேற்று கிரகவாசிகளின் உடல்கள்

மெக்சிகோ நாட்டில் இரண்டு ஏலியன் உடல்களை அந்நாட்டு ஆய்வாளர்கள் பொதுமக்கள் காட்சியப்படுத்திய விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரபஞ்சத்தில் பூமியில் இல்லாத வேறு உயிரினங்கள் உள்ளனவா என்பது குறித்த ஆய்வுகள் பன்னெடுங்காலமாக நடந்து வருகின்றன. அதுகுறித்த தெளிவான முடிவுக்கு இன்னும் ஆய்வாளர்களால் வர இயலவில்லை. இந்த சூழலில் மெக்சிகோவைச் சேர்ந்த பத்திரிகையாளரும் யூஎஃப்ஓ ஆய்வாளருமான ஜெய்மீ மாஸ்ஸன் என்பவர், மெக்ஸிகோ காங்கிரஸ் பிரதிநிதிகள் சபை விசாரணையின்போது இரண்டு ஏலியன் உடல்களை காட்சிப்படுத்தியுள்ளார்.

ஹாலிவுட் படங்களில் வரும் ஏலியன்களைப் போன்ற தோற்றம் கொண்ட அந்த உடல்கள் அளவில் சிறியதாகவும், கைகளில் மூன்று விரல்களுடனும், தலையின் பின்பகுதி பெரியதாகவும் உள்ளன. மம்மிகளாக்கப்பட்ட அந்த உடல்கள், ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்றும், அவை மனிதரின் உடல்களல்ல என்பது அவற்றின் மரபணு சோதனையில் தெரியவந்ததாகவும் ஜெய்மீ மாஸ்ஸன் கூறியுள்ளார். மேலும், இவை 2017ஆம் ஆண்டு பெரு நாட்டில் உள்ள நாஸ்கா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்டதாக மாஸ்ஸன் கூறுகிறார். நாஸ்கோ லைன்ஸ் எனப்படும் பிரம்மாண்ட ஓவியங்கள் ஏலியன்களால் வரையப்பட்டவை என்று சொல்லப்படுவதுண்டு. இது தொடர்பான பல்வேறு தகவல்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

மேலும் மெக்சிகோ தேசிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அந்த ஏலியன்களின் உடல்களில் முட்டைகள் இருந்ததை கண்டறிந்ததாகவும் மாஸ்ஸன் கூறியுள்ளார். இந்த உடல்களை காட்சிப்படுத்தியவர்களில் மெக்சிகோ கடற்படையின் ஆரோக்கியத்திற்கான அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் ஜோஸ் டி. ஜீசஸ்சும் ஒருவர். ஏலியன்கள் என்று சொல்லப்படும் அந்த உடல்களில் உள்ளிழுக்கக்கூடிய கழுத்து, பெரிய மூளைகள், பெரிய கண்கள் இருந்ததற்கான ஆதாரங்களை ஜோஸ் டி. ஜீசஸ் சமர்ப்பித்துள்ளார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. மெக்சிகோ ஆய்வாளர்களின் இந்த கருத்தை பல்வேறு ஆய்வாளர்கள் ஏற்கவில்லை. மேலும் கடந்த 2015ஆம் ஆண்டு இதே போல பெரு நாட்டிலிருந்து ஒரு வேற்றுகிரகவாசியின் உடலைக் கண்டுபிடித்ததாக மாஸ்ஸன் தெரிவித்தார். ஆனால், பின்னர் அது ஒரு மனித குழந்தையின் மம்மியாக்கப்பட்ட உடல் என்று கூறி நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

 

-th