ஐபோன் 12 அதிக அளவிலான கதிர்வீச்சை வெளியிடுவதாக பிரான்ஸ் புகார்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 மொபைல்போன் அதிகளவிலான கதிர்வீச்சை வெளியிடுவதாக அண்மையில் பிரான்ஸ் தெரிவித்தது. அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது. இருந்தாலும் உலக அளவில் ஸ்மார்ட்போன் வருவாயில் 50 சதவீதத்தை ஆப்பிள் நிறுவனம்தான் ஈட்டி வருவதாக கடந்த ஆண்டு வெளியான தரவுகள் சொல்கின்றன. தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் புதிய மாடல் போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும். அந்த வகையில் முதல்முறையாக யுஎஸ்பி-சி டைப் போர்ட் உடன் ஐபோன் 15 சீரிஸ் போன்கள் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தச் சூழலில் கடந்த 2020-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 12, அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகளவில் கதிர்வீச்சை வெளியிட்டு வருவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இதனை அந்த நாட்டின் தேசிய ஃப்ரிக்வென்சி முகமை (AFNR) தெரிவித்துள்ளது. அதன்பேரில் பிரான்ஸ் நாட்டில் ஐபோன் 12 விற்பனைக்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆப்பிள் நிறுவனத்திடம் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், மென்பொருள் அப்டேட் செய்வதன் மூலம் இதை நிறுத்த முடியும் என்றும். அப்படி அதை செய்ய தவறினால் புழக்கத்தில் உள்ள ஐபோன் 12 போன்களை திரும்ப பெற உத்தரவு பிறப்பிக்கப்படும் என பிரான்ஸ் ஜூனியர் அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் தெரிவித்துள்ளார். இதற்கு 2 வாரம் காலம் ஆப்பிள் நிறுவனத்துக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.

ஆப்பிள் மறுப்பு: உலகளாவிய கதிர்வீச்சு தரநிலைக்கு உட்பட்டு ஐபோன் 12-ன் இயக்கம் இருப்பதாக உலக நாடுகளின் முகமைகள் தெரிவித்துள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆப்பிள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை அந்நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது. இருப்பினும் தாங்கள் மேற்கொண்டு பரிசோதனை, ஆப்பிள் மேற்கொண்ட சோதனைக்கு முற்றிலும் மாறானது என பிரான்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

-th