ஈரானில் மாஷா அமினியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தன்று தந்தை கைது

மாஷா அமினியின் தந்தை கைது செய்யப்பட்டு கடும் எச்சரிக்கைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடந்த ஆண்டு ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி போலீசாரால் இளம்பெண் மாஷா அமினி கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.

இதில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 500-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாகவும் மனித உரிமைக்குழுக்கள் தெரிவித்துள்ளன. இந்த போராட்டங்கள் தொடர்பாக 7 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதனிடையே மாஷா அமினி உயிரிழந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில், அரசின் எச்சரிக்கையை மீறி மாஷாவின் பெற்றோர் தங்கள் மகளின் கல்லறையில் நினைவு தினம் அனுசரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மாஷா அமினியின் தந்தை, அவரது மகளின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தன்று கைது செய்யப்பட்டு கடும் எச்சரிக்கைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.

 

-dt