பணக்காரர்களுக்கு அதிக வரி : பாகிஸ்தான் பிரதமரிடம் ஐஎம்எஃப் வலியுறுத்தல்

வசதி படைத்தவர்களுக்கு அதிக வரியை விதிக்குமாறு பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வாரூல் ஹக் காகரிடம், சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) வலியுறுத்தியுள்ளது.

ஐநா தலைமையகத்தில் நடைபெறும் பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வாரூல் ஹக் காகர், முன்னதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவாவை சந்தித்தார். அப்போது, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிபந்தனைகளால் ஆட்சி செய்வதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து அவர், கிறிஸ்டியானா ஜார்ஜியாவுக்கு எடுத்துரைத்தார்.

குறிப்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிபந்தனைகளின் கீழ் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து உள்நாட்டில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், கட்டண குறைப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு அரசு வாக்குறுதி அளித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அப்போது அவருக்கு பதில் அளித்த கிறிஸ்டியானா, பாகிஸ்தானின் வசதி படைத்தவர்களுக்கு அதிக வரியை விதியுங்கள். வசதி இல்லாத மக்களுக்கு பாதுகாப்பு அளியுங்கள். இதைத்தான் பாகிஸ்தான் மக்களும் விரும்புவார்கள். அதைத்தான் நாங்களும் பரிந்துரைக்கிறோம். பாகிஸ்தானின் பொருளாதாரம் நிலைபெற வலிமையான கொள்கைகள் அவசியம். அதன் மூலம்தான் நிலைத்தன்மையையும் ஒருங்கிணைந்த வளர்ச்சியையும் எட்ட முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வாரூல் ஹக் காகர், கிறிஸ்டாலினா ஜார்ஜிவா உடனான சந்திப்பு ஆக்கபூர்வமாக இருந்தது. பாகிஸ்தானின் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி தொடர்பான உறுதிகளை இருவரும் பகிர்ந்து கொண்டோம் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாகிஸ்தானின் பொருளாதார நிலைத்தன்மைக்காக சர்வதேச நாணய நிதியம் 3 பில்லியன் டாலர் நிதி ஒதுக்க அனுமதி அளித்ததற்காக கிறிஸ்டாலினா ஜார்ஜிவாவுக்கு இடைக்கால பிரதமர் அன்வாரூல் ஹக் காகர் நன்றி தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

-th