வறுமை கோட்டிற்கு கீழே 1 கோடி மக்கள், அபாய கட்டத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்

பாகிஸ்தானில் வறுமை குறியீடு 39.4 சதவீதத்தை தொட்டு அபாயகரமான அளவை எட்டியுள்ளது என்றும் இதனால் சுமார் 1 கோடியே 25 லட்சம் பேர் பாதிக்கப்பட போகின்றனர் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

தற்போது காபந்து அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் பாகிஸ்தானில் வரும் ஜனவரி மாத இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அந்நாடு எடுக்க வேண்டிய சில முக்கியமான கொள்கை முடிவுகள் குறித்து அந்நாட்டிற்கு கடன் உதவி செய்து வரும் உலக வங்கி, புதிய அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை வழங்க அறிக்கை தயாரித்து வருகிறது.

அந்நாட்டிற்கு நிதி உதவி செய்ய பல நாடுகள் முன் வராத காரணத்தால், கடன் உதவி செய்யும் உலக வங்கி, தேசிய நாணய நிதியம் போன்ற நிதி நிறுவனங்கள் பல நிபந்தனைகளை அந்நாட்டிற்கு விதிக்கின்றன. விவசாயத்தையும், ரியல் எஸ்டேட் துறையையும் அந்நாடு வரி வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், தேவையற்ற செலவினங்களை குறைக்கவும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது. ஆனால், இதற்கு அங்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பாகிஸ்தான், மனித வளத்திலும் பொருளாதார நிலையிலும் பெரும் நலிவை சந்தித்து வருவதாக கூறும் உலக வங்கி அதனை சீர் செய்ய அதிரடியாக சில முடிவுகளை எடுக்க அந்நாட்டை வலியுறுத்துகிறது. கடும் விலைவாசி உயர்வாலும், வேலையில்லா திண்டாட்டத்தாலும் மாதாந்திர மின் கட்டணத்தை கூட செலுத்த முடியாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர். “சந்திரயான்-3 சாதனை மூலம் இந்தியா நிலவுக்கே விண்கலன் அனுப்பி பெருமையடைகிறது. ஆனால் நாம் இந்தியாவை விட அனைத்திலும் பின் தங்கியுள்ளோம்” என அந்நாட்டின் மூத்த அமைச்சர் ஒருவரே சமீபத்தில் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

-mm