இராகவன் கருப்பையா – மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா கடந்த காலங்களோடு ஒப்பிடும் போது தற்போது மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருவது பாராட்டத்தக்க ஒன்று.
அந்த பிரிவை கடந்த காலங்களில் நிர்வகித்தவர்கள் ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகவும் முறையாகவும் நம் சமூகத்திற்கு விநியோகம் செய்யாமல் மீண்டும் அரசாங்கத்திடமே ஒப்படைத்த அவலங்கள் நாம் அறிந்த ஒன்றுதான்.
அது மட்டுமின்றி உயர்நிலையில் செல்வாக்கு படைத்தவர்களால் இலட்சக்கணக்கான ரிங்கிட் திசை திருப்பிவிடப்பட்டு களவாடப்பட்ட கதைகளும் ஏராளம்.
இத்தகைய அநியாயங்களுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அந்த பணத்தை அப்பழுக்கின்றி நிர்வாகம் செய்வதற்கு பிரதமர் அன்வார் இவ்வாண்டு அமைத்த சிறப்புக் குழு சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இயங்குகிறது என்பதை மறுக்க முடியாது.
ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட்டும் தகுதியுடையோருக்கு முறையாக பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அக்குழுவின தலைவர் ரமணன் ஆகக் கடைசியாக இவ்வாரம் அறிவித்தார்.
முதல் முறையாக முழுத் தொகையும் நம் சமுதாய நலனுக்கு பயன்படுத்தப்படுகிறது எனும் செய்தி நமக்கு மகிழ்ச்சியளிக்கின்ற போதிலும் உண்மையிலேயே உதவி தேவைப்படுவோருக்கு மட்டும்தான் அது விநியோகம் செய்யப்படுகிறதா எனும் கேள்வியும் எழுகிறது.
ஏனெனில் “இம்முறை ஒரு சல்லி காசு கூட அரசாங்கத்திடம் நாங்கள் திருப்பிக கொடுக்கவில்ல” என்பதை மட்டுமே அக்குழுவின் தலைவர் ரமணன் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறாரே தவிர உதவி நாடி ஏங்கிக் கிடக்கும் எண்ணற்றோரின் அழுகுரல்கள் அவர் காதுகளில் விழுந்ததாக தெரியவில்லை.
அரசாங்கத்திடம் பணம் திருப்பிக் கொடுக்கப்படவில்லை என்பது மட்டுமே சாதனையல்ல என்பதை அக்குழு உணர வேண்டும். எனவே அதனை ஒரு மாபெரும் வெற்றியைப் போல் படம் பிடித்துக் காட்டி தம்பட்டம் அடித்துக் கொள்ளக் கூடாது. அதையும் தாண்டி ஆக்ககரமாக செயலாற்றி பணத்தை முறையாக பட்டுவாடா செய்வது அக்குழுவின் கடப்பாடாகும்.
வசதி குறைந்த மொத்தம் 10,000 உயர் கல்வி மாணவர்களுக்கு தலா 2,000 ரிங்கிட் உதவித் தொகை வழங்க 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதற்கான விண்ணப்பங்களை செய்வதற்கான காலக் கெடு முடிந்துவிட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதி வரையில் போதிய விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறவில்லை என்று நம்பப்படுகிறது.
இதனால் மீதப்படும் தொகை வேறு யாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது என்று தெளிவாக தெரியவில்லை. ஏனெனில் உயர் கல்வியைத் தொடர்வதற்கு வசதியில்லாமல் கணக்கிலடங்கா மாணவர்கள் இன்னமும் பரிதவித்து நிற்கின்ற அவலங்களை அன்றாடம் நாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும்தான் இருகிறோம்.
நிறைய மாணவர்கள் தாங்கள் விரும்பிய மருத்துவ துறையில் கல்வியைத் தொடர்வதற்கு இடம் கிடைக்காமல் தத்தளிக்கின்றனர் என ம.இ.கா. கல்விக் குழுத் தலைவர் நெல்சன் கூட அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தேர்வு செய்யப்பட்ட 36 நாடாளுமன்றத் தொகுதிகளின் சேவை மையங்களுக்கு மொத்தம் 3.5 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டதாக ரமணன் அறிவித்தது சற்று வேடிக்கையாக உள்ளது.
‘பசியெடுத்தவனுக்கு மீனை உண்ணக் கொடுப்பதை விட மீன்பிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்’ எனும் உவமை இவர்களுக்கு தெரியாதா என்ன?
அது மட்டுமின்றி, அந்த 36 தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குதான் ஏற்கெனவே அரசாங்க ஒதுக்கீடுகள் உள்ளனவே! அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை மித்ரா ஏன் செய்ய வேண்டும் எனும் கேள்வியும் எழுகிறது.
கடந்த காலங்களில் அரசு சாரா இயக்கங்களின் வழிதான் இலட்சக்கணக்கான ரிங்கிட் திசை திருப்பிவிடப்பட்டது. எனவே இம்முறை பயன் பெரும் அத்தகைய அமைப்புகள் எதற்காக, எவ்வகையில் பணத்தை செலவிடுகின்றன என்பதை கண்காணிப்பதும் மித்ராவின் பொறுப்பாகும்.