சமநிலை பேணும் உலக அரசியலில், மலேசியாவின் இனத்துவேசம் தேவையற்றது 

இராகவன் கருப்பையா – ஒரு காலக்கட்டத்தில் இன வெறி கொள்கைகளுக்கு பெயர் பெற்ற நாடாக தென் ஆப்ரிக்கா விளங்கியது நம் அனைவருக்கும் தெரியும்.

அத்தகைய கொடூரக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடி 27 ஆண்டுகளுக்கும் மேல் சிறைவாசம அனுபவித்த கருப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா கடந்த 1990ஆம் ஆண்டில் விடுதலையான பிறகு சுமார் 4 ஆண்டுகள் கழித்து அந்த அழுக்குப் படிந்த அத்தியாயத்திலிருந்த அந்நாடு விடுதலை பெற்றதும் உலகறிந்த வரலாறு.

அதனைத் தொடர்ந்து உலகின் வேறு எந்த நாட்டிலும் அதிக அளவிலான இனவெறிக் கொள்கைகள் நடப்பில் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் சன்னம் சன்னமாக அது குறைந்து கொண்டு வருவதையும் நம்மால் காணமுடிகிறது.

ஆனால் மலேசியாவின் நிலை என்ன? குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளின் சுயநல வேட்கை நம் நாட்டில் இன ஒதுக்கலுக்கு தொடர்ந்து உரமிடுவதாகவே உள்ளது மிகவும் வேதனையான விஷயம்.

குறிப்பாக பாஸ் கட்சித் தலைவர் ஹாடி மற்றும் முன்னாள் பிரதமர் மகாதீர் போன்றோரின் இன ஒதுக்கீட்டுக் கருத்துக்கள் பல்லின மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கத்தையே கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

உலக நாடுகள் தற்போது ‘AI’ எனப்படும் ‘செயற்கை நுண்ணறிவு’ யுகத்தில் நுழைந்து சிந்தனைக்கு எட்டாத அளவில் படு வேகத்தில் மேம்பாடு கண்டுவரும் சூழலில் இவ்விருவரும் காலங்கடந்த மடத்தனமான  யுக்திகளைக் கையாண்டு நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றனர்.

இனங்களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தி நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் வகையில் 3R'(இனம், மதம், அரசாட்சி) பற்றி யாரும் பேச வேண்டாம் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ள போதிலும் “நான் அப்படிதான் பேசுவேன், என்னை யார் என்ன செய்ய முடியும்” என முரண் பிடிக்கிறார் 98 வயது மகாதீர்.

“இந்நாடு மலாய்க்காரர்களுக்கு மட்டுமே சொந்தம், மற்றவர்கள் எல்லாரும் வந்தேறிகள். பிழைப்புத் தேடி வந்தவர்கள் தத்தம் நாடுகளுக்குத் திரும்பாமல் இங்கேயே தங்கிவிட்டனர்” என கடுகளவும் வாய்க் கூசாமல் விஷத்தைக் கக்குகிறார் அவர். அவருடைய கருத்தானது  இந்நாட்டில் இந்தியர்களுக்கும் சீனர்களுககும் உரிமைகள் வழங்கப்படக் கூடாது என்பதை பறைசாற்றுவதைப் போலவே உள்ளது.

இத்தகைய பிற்போக்கு சிந்தனைகளை எல்லாம் பல்லாண்டுகளுக்கு முன்னதாகவே தகர்தெரிந்த நாடுகள் தற்போது எந்த அளவுக்கு மேம்பாடு கண்டுள்ளன என்பது வெள்ளிடை மலை.

அண்டை நாடான சீங்கப்பூரிலேயே இதனை நாம் காண்கிறோம். ஒரு பொருளாதார மேதையான தர்மன் சண்முகரத்தினம் அந்நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது அவருடைய திறமைக்குத்தான் அங்கீகாரம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. கடந்த காலங்களில் தேவன் நாயர் மற்றும் எஸ்.ஆர்.நாதன் முதலியோரும் அந்நாட்டில் அதிபர்களாக பதவி வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட சட்டத்துறை வல்லுநர் கமலா தேவி உலகின் சக்திவாய்ந்த நாடான அமெரிக்காவுக்கு துணையதிபராக உள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ரிஷி சுனாக் மற்றொரு சக்திவாய்ந்த நாடான பிரிட்டனின் பிரதமராக தேர்வு பெற்றுள்ள வேளையில் அயர்லாந்தின் பிரதமராக உள்ளார் இந்திய பரம்பரையைச் சேர்ந்த லியோ வரட்கார்.

அதே போல செய்ச்சீல்ஸ் நாட்டின் அதிபர் வேவல் நாம்கலவன், சுரினாம் நாட்டின் முன்னாள் அதிபர்களான ராம்செவாக் சங்கர், ராம்டாத் மிசியர், அந்நாட்டின் முன்னாள் பிரதமர்களான எரல் அலிபக்ஸ், பிரதாப் ராதாகிருஷ்ணன் மற்றும் ட்ரிணிடட் நாட்டின் முன்னாள் பிரதமர் கமலா பிரசாத், ஆகியோரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்தான்.

மோரிஷஸ் நாட்டின் அதிபர் பிரித்விராஜ்சிங் ரூபன் மற்றும் பிரதமர் பிரவின் ஜுக்நாத் ஆகியோர் மட்டுமின்றி போர்த்துகல் பிரதமர் அந்தோனியோ கோஸ்தா, குயானா நாட்டின் முன்னாள் பிரதமர்கள் இருவரும் முன்னாள் அதிபர்கள் இருவரும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்தான்.

ஆனால் மலேசியாவில் கனவில் கூட இத்தகைய சூழலை நாம் எதிர்பார்க்க முடியாது. மகாதீருக்கும் ஹாடிக்கும் நகர் புறங்களுக்கு அப்பால் குறிப்பிட்ட அளவுக்கு செல்வாக்கு இருப்பதால் அவர்கள் எதைச் சொன்னாலும் அதனை வேத வாக்காக எடுத்துக் கொள்வதற்கு இலட்சக் கணக்கானோர் தயாராய் உள்ளனர். அண்மைய தேர்தல் முடிவுகள் இதற்கு சான்று.

நிலைமையை சமாளிப்பதற்கு பிரதமர் அன்வாரும் அதற்கு ஏற்றவாறு வலைந்து கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் இனபாகுபாடற்ற சூழலை தற்போதைக்கு நாம் எதிர்பார்க்க முடியாது.