போலிச் செய்தி பரப்பியதாக ரஷ்ய யூடியூபருக்கு 8 ஆண்டுகள் சிறை

போலிச் செய்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட ரஷ்யாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரஷ்யாவின் கிராஸ்னோடர் நகரத்தைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் நோஸ்ட்ரினோவ். 38 வயதாகும் இவர் யூடியூப் சேனல் ஒன்றை வைத்து அவ்வப்போது வீடியோக்கள் பதிவேற்றம் செய்துவருகிறார். கடந்த சில தினங்களாக ரஷ்ய ஹைவே பேட்ரோல் போலீஸார் சட்டத்தை மீறுவதாகக் கூறி சில வீடியோக்களை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோக்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம், ரஷ்யா – உக்ரைன் யுத்தம் தொடர்பான போலி புகைப்படம் ஒன்றை நோஸ்ட்ரினோவ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்ததாகக் கூறி போலீஸார் அவரை கைது செய்தனர். ஆனால் நோஸ்ட்ரினோவின் மனைவி எகட்டெரினா, அப்படியான புகைப்படம் எதையும் நோஸ்ட்ரினோவ் பகிரவில்லை என்றும், இது அவரை பழிவாங்கும் நோக்கில் போலீஸாரால் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் குற்றம்சாட்டினார். இந்த சூழலில் இந்த வழக்கை நேற்று (செப்.29) விசாரித்த கிராஸ்னோடர் நீதிமன்ற நீதிபதி, நோஸ்ட்ரினோவ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு எட்டு ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்தார்.

உக்ரைன் மீதான போர் தொடங்கியதன் பிறகு, இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யாவில் கருத்து சுதந்திரத்தை முடக்குவது, அரசாங்கத்துக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் கைது செய்யப்படுவது அல்லது அபராதம் விதிப்பது அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

 

-th