கொரோனா தடுப்பூசி உருவாக்கத்தில் உதவிய 2 விஞ்ஞானிக்கு மருத்துவ நோபல் பரிசு

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகளுக்கான அறிவிப்பு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று வெளிவரத் தொடங்கியது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும். முதல் நாளான நேற்று உடலியல் / மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஹங்கேரியில் பிறந்த கட்டாலின் கரிக்கோ, அமெரிக்காவை சேர்ந்த ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோருக்கு இந்தப் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிராக பயனுள்ள எம்ஆர்என்ஏ தடுப்பூசி உருவாக்குவதற்கு இவர்களின் கண்டுபிடிப்புகள் பெரிதும் உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விருது அறிவிப்பு நிகழ்ச்சியில் ஸ்வீடனின் கரோலின்ஸ்கா நிறுவனம் கூறும் போது, “நமது நோய் எதிர்ப்பு அமைப்புடன் எம்ஆர்என்ஏ எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதுபற்றிய நமது புரிதலை இவர்கள் தங்களின் அற்புதமான கண்டுபிடிப்புகள் மூலம் அடிப்படையான மாற்றம் செய்துள்ளனர். இந்த நவீன காலத்தில் மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கிய கரோனா தொற்றுநோய்க்கு எதிராக தடுப்பூசி உருவாக்கத்தில் இவர்களின் கண்டுபிடிப்புகள் முக்கியப் பங்காற்றி உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் இயற்பியலுக்கான நோபல் இன்றும் வேதியியலுக்கான நோபல் பரிசு நாளையும் அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து இலக்கியம் (அக். 5),அமைதி (அக். 6), பொருளாதாரம் (அக்.9) ஆகியவற்றுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.

ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளருமான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க அவரது நினைவாக ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு விருதுக்கும் சுமார் 10 லட்சம் டாலர்கள் (ரூ.8.30 கோடி) பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.

 

 

-ht