வார இறுதியில் யுனிவர்சிடி பெண்டிடேகான் சுல்தான் இட்ரிஸில் (யுபிஎஸ்ஐ) போலீசாரால் தாக்கப்பட்ட மாணவரான முகம்மட் சப்வான் அனாங், தாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வேளையில் தம் கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டதாகக் கூறினார்.
ஜனவரி 1 அதிகாலை உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றபோது அந்த கெனாரி கார் யுபிஎஸ்ஐ கிழக்கு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அவரின் மனைவி மஸ்துரா அபு பக்கார் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“ஜனவரி 1 காலை பத்து மணி அளவில் நண்பர்கள் சிலர் அழைத்து கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
“சப்வானுக்கு உடல்நிலை இன்னும் முழுமையாகக் குணமடையதில்லை என்பதால் அவரால் போலீஸ் புகார் செய்ய முடியவில்லை”, என்றவர் குறுஞ்செய்தி அனுப்பி வைத்திருந்தார்.
நேற்று சிலிம் ரிவர் மருத்துவ மனையிலிருந்து வெளிவந்த சப்வானுக்கு இன்றுகாலை நெஞ்சு வலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்படுவார் என்றாரவர்.
புத்தாண்டில் போலீசார், மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்கும் முயற்சியில் இறங்கியபோது மலாயாப் பல்கலைக்கழக மாணவர் இயக்கத் தலைவரான சப்வானுக்கு இழுப்பு நோய் வந்துவிட்டது.
அதிகாலையில் மாணவர்களுக்கும் போலீசாருக்குமிடையில் நடந்த தள்ளுமுள்ளுவில் முகத்தில் குத்துப்பட்டதாகவும் முழங்கால்களால் இடுப்பில் தாக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
அச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்வதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
பேராக் போலீஸ் தலைவர் முகம்மட் சுக்ரி டாஹ்லான், போலீஸ் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதாக இணையத்தளத்தில் பரவலாகக் கூறப்படுவதை மறுத்தார். போலீஸ்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனி பணிப்படை ஒன்று அமைக்கப்படும் என்றாரவர்.
அச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று யு-டியுப்பில் பதிவேற்றம் கண்டுள்ளது என்றும் அதில் போலீஸ் மூர்க்கத்தனத்துடன் செயல்பட்டதாக தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.