முன்னாள் ஆகாயப்படை அதிகாரி நீதிகேட்டு பேரரசருக்கு மகஜர் சமர்பிப்பார்

பணி ஓய்வுபெற்ற ஆகாயப்படை சார்ஜெண்ட் ஒருவர், தமது 17 போலீஸ் புகார்களுக்கும் எவ்வித ஆதாரமுமில்லை என்று சட்டத்துறை தலைவர் (ஏஜி) அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து நீதி கேட்டு பேரரசருக்கு மகஜர் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். 

பைசல் ஜீனோங் அப்துல்லாவும்,47, அவரின் குடும்பத்தாரும் மகஜரை அரண்மனையிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

கூச்சிங்கில் தாங்கள் வாழும் குடியிருப்பில் மின்திருட்டு நடக்கும் தகவலை வெளியிடபோய் அரச மலேசிய ஆகாயப்படை அதிகாரிகளின் “சித்திரவதைக்கு” ஆளானதாக பைசல் கூறியதை  மலேசியாகினி 2010 ஜூலையில் அறிவித்திருந்தது.

அதன் தொடர்பில் அவர் போலீசில் பல புகார்களைச் செய்தார். புகார்களுக்குப் பதிலளித்து  ஏஜி அலுவலகம் டிசம்பர் 22-இல், தற்போது நிபோங் தெபாலில் வசித்து வரும் பைசலுக்குக் கடிதம் அனுப்பியிருந்தது. அதில் அவரின் புகார்களுக்கு “ஆதாரமில்லை” என்று கூறப்பட்டிருந்தது.

“நம் நாட்டு சட்டங்களில் நம்பிக்கை இழந்துவிட்டேன். இஸ்லாமிய நாடான இங்கு நாகரிகமும் இல்லை, நல்ல சட்டங்களும் இல்லை”, என்றார். “மலேசிய சட்டங்கள் பாகுபாடு காட்டுகின்றன. இங்கு பணத்தாலும் அதிகாரத்தாலும் சட்டத்தை வாங்கலாம், விற்கலாம்.”

அவருக்கு வந்த கடிதத்தில், சரவாக்  சட்டத்துறை அனுப்பி வைத்த அறிக்கையை ஆராய்ந்து பார்த்ததாக, வழக்குத் தொடுப்புப் பிரிவின் தலைவர் துன் அப்ட் மஜிட் துன் ஹம்சா குறிப்பிட்டிருந்தார். “…..மற்றவற்றோடு நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் 2008 டிசம்பரில் அதிகாரிகளால் அச்சுறுத்தப்பட்டதாகவும் காயப்படுத்தப்பட்டதாகவும் சிறுமைப்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருப்பதற்கு ஆதாரமில்லை என்பது தெரிய வந்தது”, என அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

“போலீசும் ஆகாயப்படையும் முறைப்படித்தான் நடந்துகொண்டுள்ளன. உங்களைக் கைது செய்ததும், உங்கள்மீதும் உங்கள் குடும்பதார்மீதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் முறையானவைதாம்”, என்றது கூறியது.

பிடாயு இனத்தவரான பைசல், இஸ்லாத்துக்கு மதம் மாறியவர். தம் போலீஸ் புகார்களில் உண்மையில்லை என்றால் அவை ‘தப்பான புகார்கள்’ ஆகும்.தப்பான புகார் செய்த தம்மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே என்றாரவர்.

“நானும் என் குடும்பத்தாரும் புகார்களில் பொய் சொன்னோம் என்று எங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று போலீசுக்கும் ஏஜிக்கு சவால் விடுக்கிறேன்”, என்று பைசல் ஆத்திரத்துடன் கூறினார்.

சரவாக்கில் அதிகாரிகளின் தொல்லைகள் பொறுக்கமாட்டாமல் கோலாலம்பூருக்கும் நெகிரி செம்பிலானுக்கும் இடம் மாறி வந்ததாகக் கூறிய பைசல் இப்போது இருப்பது நிபோங் தெபாலில்.

“என் பணி ஓய்வு அடையாள அட்டை, ஆகாயப்படையில் பணி புரிந்ததைக் காண்பிக்கும் ஆவணங்கள் எல்லாவற்றையும் அதிகாரிகள் இன்னமும் பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள்”.அந்நிலைக்குப் பலர் காரணம் என்று குறிப்பிட்டு அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டார்.

“அவர்களின் தொந்திரவால் என் குடும்பத்தாரும் நானும் கடும் துயரங்களுக்கு ஆளானோம். இப்போது என் குடும்பம்  என் மனைவியின் வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கிறது. அவர் நாசி லெம்மாக் விற்பனை செய்கிறார். அவர் ஓர் ஆஸ்துமா நோயாளி. ஆஸ்துமாவால் அவரது வேலை அடிக்கடி பாதிக்கப்படுகிறது” , என்றார்.

அவரின் மனைவி சே மூர்னி மாட் சைன், ஏஜியின் கடிதம் தங்களை மிகவும் பாதித்து விட்டதாக கூறினார்.

“அதைக் கண்டு மனம் தளர்ந்தோம். பள்ளிசெல்லும் ஆறு பிள்ளைகளுக்குப் பொருள் வாங்கும் மனநிலைகூட இல்லாமல் போய்விட்டது.

“ஆனாலும் விட்டுவிட மாட்டோம், தொடர்ந்து நீதி கேட்டுப் போராடுவோம்….. பல திட்டங்கள் உண்டு. ஊடகங்கள் எங்களின் அவல நிலை பற்றிய செய்திகளை வெளியிட்டு ஆதரவு கொடுக்க வேண்டும்”, என்றார்.  .