ராஜா பெத்ரா கமாருதின், எதிர்த் தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமை கடுமையாகக் குறை கூறி விட்டு வலுவான எதிர்த்தரப்புத் தேவை எனச் சொல்வது முற்றிலும் பொருத்தமற்றது என முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராஹிம் கூறுகிறார்.
எதிர்த்தரப்பு தொடர்பாக ராஜா பெத்ரா வெளியிட்ட அறிக்கைகள் மீது அவர் கருத்துரைத்தார்.
அந்த அறிக்கைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நாளேட்டில் வெளியாகியுள்ளன.
அந்த அறிக்கைகளைப் படித்து தாம் மிகவும் “அதிர்ச்சி” அடைந்ததாக கீத்தா எனப்படும் அரசியல் கட்சியின் தலைவருமான ஜைட் சொன்னார்.
“சரவாக் தேர்தலுக்கு முன்னதாக அன்வார் இப்ராஹிம் பற்றி தாம் சொன்ன தகவல்களையே ராஜா பெத்ரா இப்போது மீண்டும் கூறியிருக்கிறார். ஆகவே புதிதாக எதுவும் இல்லை. ஒரே கருத்துக்கள். நான் அவற்றை மீண்டும் சொல்ல விரும்பவில்லை.”
“எல்லாக் கோணங்களிலும் அன்வாரை தாக்கிய ராஜா பெத்ரா, எதிர்த்தரப்பு இன்னும் வலுவடைவதைக் காணத் தாம் விரும்புவதாகச் சொல்லியிருப்பதைத் தான், என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை,” என்றார் அவர்.
ஒர் “ஐக்கியமான முன்னணியை” வழங்க வேண்டுமானால் எதிர்த்தரப்பில் பல்வேறு தரப்புக்கள் குறிப்பாக சிறிய அமைப்புக்கள் இடம் பெற்றிருப்பது முக்கியமாகும்.”
எதிர்த்தரப்பில் ஒர் அங்கத்தை (அன்வார் உறுதியாக அதில் ஒர் அங்கம்) குத்திக் குதறி விட்டு எதிர்த்தரப்பு வலுப் பெறுவதற்கு அதுதான் வழி எனச் சொல்வது பொருத்தமாகத் தெரியவில்லை.”
“நாம் அனைத்து மலேசியர்களுடைய ஒற்றுமைக்கும் இணக்கத்திற்கும் போராட வேண்டும். தாங்கள் விரும்பாத சில தலைவர்களை தூக்கி எறிய வேண்டும் என வலியுறுத்திக் கொண்டு எதிர்த்தரப்பு வலுப் பெறுவதைக் காணத் தாம் விரும்புவதாகச் சொல்கின்றவர்களை தோழர்களாகக் கருத முடியாது,” என அந்த முன்னாள் பிகேஆர் தலைவருமான ஜைட் சொன்னார்.