4 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் திரும்பினார் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 4 ஆண்டுகளுக்குப் பிறகு 21.10.2023 சொந்த நாட்டுக்குத் திரும்பினார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீதான ஊழல் வழக்கில், அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து லாகூரில் உள்ள கோட்லாக்பாத் சிறையில் நவாஸ் ஷெரீப் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அக்டோபர் 22 ஆம் தேதி நவாஸ் ஷெரீப்புக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பு எனக் கருதி சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய நவாஸ் ஷெரீப், கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி லாகூரில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆட்சி இருந்ததால், தொடர்ந்து அவர் லண்டனிலேயே தங்கி இருந்தார். இந்நிலையில், பாகிஸ்தானில் வரும் ஜனவரியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அவர் 21.10.2023 இஸ்லாமாபாத் திரும்பினார். முன்னதாக, லண்டனில் இருந்து துபாய் வந்த அவர், அங்கு சில நாட்கள் தங்கி இருந்துவிட்டு தற்போது சொந்த நாடு திரும்பி உள்ளார். இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூருக்கு விமானத்தில் சென்ற அவர் பின்னர் அங்கிருந்து தனது வீடு திரும்ப உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு லாகூரில் பிரம்மாண்ட வரவேற்புக்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

நவாஸ் ஷெரீப்பின் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ள கட்சியின் மூத்த தலைவர் க்வாஜா முகம்மது ஆசிப், “இது கொண்டாட்டத்துக்கான தருணம். நவாஸ் ஷெரீப்பின் வருகை பாகிஸ்தானின் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும். மக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

-ht