அமெரிக்காவின் மெய்ன் நகரில் 3 இடங்களில் துப்பாக்கிச் சூடு: 22 பேர் பலி; 60 பேர் காயம்

அமெரிக்காவின் மெய்ன் நகரில் லூயிஸ்டன் எனும் பகுதியில் 3 வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அமெரிக்க நேரப்படி புதன் பின்னிரவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

ஒரே நேரத்தில் மெய்ன் நகரின் உணவகம், வால்மார்ட் விநியோக மையம், மதுபான விடுதி எனப் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததையடுத்து, போலீஸார் பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆட்ரோஸ்கோகின் நகர காவல்துறை சந்தேக நபரின் 2 புகைப்படங்களை வெளியிட்டது. அதில் அந்த மர்ம நபரின் கையில் ரைஃபில் துப்பாக்கியுடன் இருப்பது பதிவாகியிருந்தது. அந்தப் புகைப்படங்களைப் பொதுவெளியில் பகிர்ந்த நகர ஷெரீஃப், படத்தில் இருப்பவர் தொடர்பான தகவல் தெரிந்தால் பகிரும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் துப்பாக்கியுடன் இருந்த நபரின் பெயர் ராபர்ட் கார்டு என்பது தெரியவந்துள்ளது. 40 வயது மதிக்கத்தக்க அந்த நபரை தேடப்படும் பயங்கர ஆபத்தான நபராக காவல்துறை அறிவித்துள்ளது. அந்த நபர் இன்னும் காவல்துறையில் சிக்காத காரணத்தால் மெய்ன் நகரம் உச்சபட்ச பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் அனைவரும் மத்திய மெய்ன் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையும் அதனை உறுதி செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும்: அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் அதிகம். உலகின் மக்கள் தொகையில் அமெரிக்க மக்களின் பங்கு 5%-க்கு சற்றே குறைவு. ஆனால், சொந்தமாக வைத்திருக்கும் துப்பாக்கிகளில் கிட்டத்தட்ட பாதி அமெரிக்கர்கள் கைகளில் தான் உள்ளன. அமெரிக்க துப்பாக்கி வன்முறைகள் தொடர்பான ஆவணக் காப்பகக் குறிப்பின்படி 2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில் மட்டுமே துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 25,198 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 118 பேர் வீதம் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 170 பேர் குழந்தைகள் 879 பேர் பதின்ம வயதினர் ஆவர். இந்த 25 ஆயிரம் பேரில் 14 ஆயிரம் பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டவர்களாவர். 2023 தொடங்கியதிலிருந்து ஆகஸ்ட் வரை சராசரியாக நாளொன்றுக்கு 66 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

 

 

-ht