யூபிஎஸ்ஐ மாணவர், தங்கும் விடுதியிலிருந்து நீக்கப்பட்டார்

கடந்த ஞாயிற்றுக் கிழமை காலையில் யூபிஎஸ்ஐ என்ற Universiti Pendidikan Sultan Idrisல் நிகழ்ந்தகுந்தியிருப்பு மறியலில் சம்பந்தப்பட்ட அந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர், அவருடைய தங்கும் விடுதியிலிருந்து நீக்கப்பட்டார். அந்த மறியல் போலீசாருடன் கைகலப்பில் முடிவடைந்தது.

அந்த மாணவர் நேற்று போலீஸ் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன்  தங்கும் விடுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ள தகவல் அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாக எல்எம்பி என்ற Legasi Mahasiswa Progresif ஒருங்கிணைப்பாளரான  அடாம் அட்லி அப்துல் ஹலிம் கூறினார்.

அமினுடின் பாக்கி தங்கும் விடுதியிலிருந்து எல்எம்பி அமைப்பின் செயலாளருமான சித்தி நுருல் பித்தெரியா அப்துல் ஹலிம் வெளியேற்றப்பட்டுள்ளதை அடாம் அட்லி இன்று தொடர்பு கொண்ட போது உறுதிப்படுத்தினார்.

புத்தாண்டுக்கு முதல் நாளன்று நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்ட இன்னொரு யூபிஎஸ்ஐ மாணவரும் அத்தகைய ஒழுங்கு நடவடிக்கையை எதிர்நோக்கக் கூடும் என அவர் தெரிவித்தார். ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.

“அவர்களுக்குப் பல்கலைக்கழக அதிகாரிகள் விசாரணை நோட்டீஸ் எதனையும் அனுப்பவில்லை,” என அடாம் அட்லி சொன்னார். அவர் தஞ்சோங் மாலிம் பல்கலைக்கழக வளாகத்தில் வசிக்கவில்லை.

என்றாலும் சித்தி நுருக் பித்தெரியா ஒழுங்கு நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கப்பட மாட்டாது என யூபிஎஸ்ஐ துணைவேந்தர் ஜுனாய்டி அபு பாக்கார் சொன்னதாக மலாய் நாளேடான சினார் ஹரியான் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே அம்னோ தலைமையகத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் படம் இருந்த கொடியை இறக்கியதற்காக அடாம் அட்லி மீதான விசாரணை திட்டமிட்டபடி ஜனவரி 9ம் தேதி பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறும் என்ற தகவலையும் அந்த ஏடு வெளியிட்டது.

“பல்கலைக்கழகக் கட்டிடத்திற்கு முன்பு புத்தாண்டுக்கு முன் தினம் நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தப்பட்டதற்காகவும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் துணைவேந்தர் தெரிவித்தார் என்றும் அந்த ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த மூன்று மாணவர்களும் தேர்வுகளை எழுதுவதிலிருந்து தடை செய்யப்படும் சாத்தியம் உண்டா என அடாம் அட்லியிடம் வினவப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த அவர்,” நான் தேர்வுகளை எழுதுவேன். மற்ற இருவரும் அவ்வாறே செய்வர். எங்களைத் தடை செய்வதற்குப் பல்கலைக்கழகத்துக்கு உரிமை இல்லை,” என்றார்.