பாலஸ்தீனர்களைக் கொல்ல இஸ்ரேலை அமெரிக்கா ஊக்குவிக்கிறது – ஈரான் அதிபர்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனர்களைக் கொல்ல இஸ்ரேலை அமெரிக்கா ஊக்குவிக்கிறது என ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி குற்றம்சாட்டியுள்ளார்.

காசாவில் ஒரே மாதத்தில் 3-வது முறையாக தொலைத்தொடர்பு முடக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் – இஸ்ரேல் மோதலில் இதுவரை 9,700-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 4000-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள். இஸ்ரேலில் 1,400 பேர் பலியாகியுள்ளனர். 242 பேர் ஹமாஸ் படையினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரைப்பகுதிக்கு திடீர் பயணம் செய்தார். பின்னர் அவர் பாலஸ்தீன அதிபர் மஹமூத் அப்பாஸை சந்தித்தார். காசாவாசிகள் கட்டாயமாக வெளியேற்றப்படக் கூடாது என்று அமெரிக்க அமைச்சர் பிளிங்கன் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தெஹ்ரானில் செய்தியாளர்களிடம் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி கூறும்போது, “காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களைக் கொல்லவும், கொடூரமான செயல்களை செய்யவும் இஸ்ரேலை அமெரிக்கா ஊக்குவிக்கிறது. குண்டுவெடிப்புகள் விரைவில் நிறுத்தப்பட வேண்டும். போர் நிறுத்தம் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் . ஒடுக்கப்பட்ட காசா மக்களுக்கு உதவிகள் செய்யப்பட வேண்டும். மனிதகுலத்துக்கு எதிரான இந்தக் கொடூரமான குற்றங்கள் அனைத்தும் ஓர் இனப் படுகொலை. இது அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் சியோனிச ஆட்சியால் (இஸ்ரேல்) நடத்தப்படுகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக இஸ்லாமிய உலகம் ஒன்றிணைய வேண்டும். இஸ்லாமிய நாடுகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இஸ்ரேல் இன்று இதுபோல் காசாவில் குண்டுமழை பொழிந்திருக்க முடியாது என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

 

-ht