அன்வார் உறுதியளித்த தடவியல் தணிக்கை எங்கே?

இராகவன் கருப்பையா – பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியமைத்தால் ம.இ.கா. தொடர்புடைய 3 நிறுவனங்கள் மீது தடவியல் தணிக்கை செய்யப்படும் என பிரதமர் அன்வார் செய்த அறிவிப்பு தற்போது வெறுமனே கிடப்பில் உள்ளது.

ம.இ.கா.வின் முதலீட்டு நிறுவனமான மைக்கா ஹோல்டிங்கஸ், எம்.ஐ.இ.டி. எனப்படும் அக்கட்சியின் கல்வி நிறுவனம் மற்றும் மலேசிய இந்தியர் மேம்பாட்டு உருமாற்றுப் பிரிவான மித்ரா, ஆகிய 3 நிறுவனங்களிலும் நிதி முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக நீண்ட நாள்களாகவே புகார்கள் இருந்து வருகின்றன.

நம் சமூகத்தின் இன்னல்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரப் போகிறது, பொருளாதாரத்தில் நாம் பீடு நடை போட போகிறோம் என்றெல்லாம் ஆசைகாட்டி கடந்த 1980ஆம் ஆண்டுகளில் நாடு தழுவிய நிலையில் இந்தியர்களிடமிருந்து மில்லியன் கணக்கில் ம.இ.கா. பணம் வசூல் செய்தது.

இந்த ஆசை வார்த்தைகளை நம்பி, அச்சமயத்தில் குறைவான வருமானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான தோட்டப்பாட்டாளிகளும் பி40 தரப்பைச் சேர்ந்தவர்களும் கூட தங்களுடைய நகைகளை அடகு வைத்து, ஆயுள் காப்புறுதிகளை ரத்து செய்து மற்றும் கடனை உடனை வாங்கி அந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

ஆனால் பின்னாளில் அந்த பங்குதாரர்கள் எப்படிப்பட்ட அவலத்திற்கு உள்படுத்தப்பட்டனர், அந்நிறுவனம் என்ன கதியானது என்பதெல்லாம் நாடறிந்த வரலாறு.

அதே போலதான் கெடா மாநிலத்தில் எய்ம்ஸ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதற்கு எம்.ஐ.இ.டி. வழியாக பொது மக்களிடமிருந்து பணம் வசூல் செய்யப்பட்டது.

பிறகு மித்ரா வழியாக நம் சமூகத்திற்கு அரசாங்கம் வழங்கிய மில்லியன் கணக்கான ரிங்கிட்டும் கடந்த காலங்களில் எப்படியெல்லாம் வழிமறிக்கப்பட்டு திசை திருப்பிவிடப்பட்டது என்பதெல்லாம் பழைய கதை.

பக்காத்தான் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இந்திய சமூகத்தின் நலன் கருதி இம்மூன்று நிறுவனங்கள் மீதும் தடவியல் தணிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அது வெளிப்படையாக இருக்கும் எனவும் கடந்த 15ஆவது பொதுத் தேர்தலுக்கு முன் அன்வார் செய்த அறிவிப்பு நமக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் தேர்தல் முடிந்து தற்போது ஏறத்தாழ ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் அன்வார் அதைப்பற்றி வாய்திறப்பதே இல்லை என்பது நமக்கு மிகவும் வருத்தமாகவும் ஏமாற்றமளிப்பதாகவும் உள்ளது.

மித்ராவில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக ஒரு சிலர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் ‘பெரும் முதலைகள்’ இன்னமும் வளைத்து பிடிக்கப்படவில்லை என்று நம்பப்படுகிறது.

தேர்தலுக்குப் பிறகு எதிர்பார்த்த அளவுக்கு நம் சமூகத்தை அரசாங்கம் கவனிக்கவில்லை எனும் ஆதங்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பது எல்லாருக்கும் தெரியும். தமக்கான இந்திய சமுதாயத்தின் ஆதரவு இதனால் சரிந்துள்ளதும் அன்வாருக்கு தெரியாமல் இல்லை.

எனவே குறைந்தபட்சம் மைக்கா ஹோல்டிங்ஸ் மீதும் எம்.ஐ.இ.டி. மீதும் விசாரணையை முடுக்கிவிட்டால் அன்வார் மீதான நம் சமூகத்தின் நம்பிக்கை மறுபடியும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் வழியாக ம.இ.கா.வும் இணைந்துள்ளதால்தான் இந்த தயக்கம் என்று எல்லோராலும் பேசப்படுகிறது. அதுதான் உண்மையென்றால் எவ்வகையில் அது நியாயம் எனும் கேள்வி எழுவதிலும் வியப்பில்லை.

ஒரு சில ‘அரசியல் தலை’களை காப்பாற்றுவதற்காக ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் கொடுத்த வாக்குறுதியிலிருந்து அன்வார் பின்வாங்கக் கூடாது என்பது அவசியம்.

ஏனென்றால் இது வெகுசன மக்களின் வேர்வை சிந்திய உழைப்பிலான சேமிப்பு சம்பந்தப்பட்ட விவகாரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் அவர் தண்டிக்கப்படுவதுதானே நீதி, நியாயம், நேர்மை என்பது அன்வாருக்கு தெரியாதா என்ன?

இந்தியர்களில் பெரும்பான்மையோர் சராசரி வாழ்க்கையை வாழ்பவர்கள். அதிலும் வறுமை கோட்டுக்கு அருகாமையில்தான் இவர்களின் சமூக பொருளாதாரம் அமைந்துள்ளது. எனவே மற்ற சமூகங்களை விட அரசாங்கத்தின் அக்கறை இந்தியர்கள் சார்ந்த திட்டங்கள் அவர்களுக்கு பயனளிப்பதை உறுதி செய்வதில் இருக்க வேண்டும்.

பிச்சை எடுக்கும் பெருமாள் அதை பிடுங்கி தின்னுமாம் அனுமான் என்ற நிலையை ஒழிக்க வேண்டும்.