கைரி: சிறப்புக்குழு பெர்சே கோரிக்கைகளை மட்டும் பரிசீலிக்கும் என்பது தவறாகும்

தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் சிறப்புக் குழு, தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்குப் போராடும் பெர்சே அமைப்பு விடுத்துள்ள கோரிக்கைகளை மட்டும் பரிசீலிக்கும் எனச் சொல்வது தவறு என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதின் கூறியிருக்கிறார்.

அதற்கு மாறாக அம்னோ இளைஞர் பிரிவு, சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம், பதிவு செய்யப்பட்ட பல்வேறு அரசு சாரா அமைப்புக்கள் ஆகியவற்றின் கருத்துக்களையும் அது ஆய்வு செய்யும் என்றார் அவர்.

“நாடாளுமன்ற சிறப்புக்குழு அமைக்கப்படுவதை அம்னோ இளைஞர் பிரிவு வரவேற்கிறது. பெர்சே கூறும் கருத்துக்களை மட்டுமின்றி பல்வேறு தரப்புக்கள் தெரிவித்துள்ள கருத்துக்களையும் அது ஆராய வேண்டும் என அம்னோ இளைஞர் பிரிவு கருதுகிறது,” என நேற்று கெப்பாளா பாத்தாஸில் ரமதான் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் கூறினார்.

நாடாளுமன்ற சிறப்புக்குழுவின் பணிகளில் பெரும்பகுதி பெர்சே கோரிக்கைகளைச் சார்ந்திருக்கும் என செய்தி இணையத் தளங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் பற்றி ரெம்பாவ் எம்பி-யுமான கைரி கருத்துரைத்தார்.

வேட்பாளர் நியமன நடைமுறைகள் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்பது அம்னோ இளைஞர்கள் வழங்கியுள்ள யோசனைகளில் அடங்கும் என அவர் சொன்னார். ஏனெனில் அந்த நடைமுறை “நேரம், ஆற்றல், பணம் ஆகியவை விரயமாவதற்கு வழி வகுக்கிறது” என்றார் அவர்.

“பல வளர்ச்சி அடைந்த நாடுகளில் நாம் செய்வதைப் போல வேட்பாளர் நியமன நடைமுறைகள் பின்பற்றப்படுவது இல்லை. யாரும் வேட்பாளராகப் பதிவு செய்து கொள்வதற்கு 24 மணி நேரம் வழங்கப்படுகிறது”, என கைரி குறிப்பிட்டார்.

பெர்னாமா