நீக்கப்பட்ட யூபிஎஸ்ஐ மாணவர் தங்கும் விடுதியில் தொடர்ந்து இருப்பார்

யூபிஎஸ்ஐ என்ற Universiti Pendidikan Sultan Idris தங்கும் விடுதி ஒன்றிலிருந்து நீக்கப்பட்ட மாணவர் ஒருவர், அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் கொடுக்கப்படும் வரையில் தாம் தொடர்ந்து அந்தத் தங்கும் விடுதியில்  தாம் இருக்கப் போவதாக கூறியுள்ளார்.

ஜனவரி முதல் தேதி யூபிஎஸ்ஐ வளாகத்துக்கு வெளியில் நிகழ்ந்த மாணவர் ஆர்ப்பாட்டத்தின் போது அங்கு இருந்த சித்தி நுருல் பித்தெரியா அப்துல் ஹலிம் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

“மேலிடத்து ஆணை” என மேற்கோள் காட்டி தங்கும் விடுதி ஊழியர் ஒருவர் வாய்மொழியாக மட்டுமே தமக்கு அதனைத் தெரிவித்ததாக அவர் கூறிக் கொண்டார்.

“நான் இன்னும் தங்கும் விடுதியில்தான் உள்ளேன். நான் எனது நிலையில் உறுதியாக இருக்கிறேன்,” மலாய் இலக்கியப் பட்டப்படிப்பு மாணவரான அவர் சொன்னார்.

ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் போலீஸ் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டதும் இரவு மணி 9.30 வாக்கில் தங்கும் விடுதியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு தம்மிடம் கூறப்பட்டதாக சித்தி சொன்னார்.

நீக்கப்பட்ட மற்ற மாணவர் அலிப் அஷ்ராப் என அவர் அடையாளம் காட்டினார்.