நஜிபை விடுவிக்க மஇகா கோருவது அபத்தமானது  

இராகவன் கருப்பையா — ஒரு காலத்தில் இந்நாட்டு இந்தியர்களின் பலம் பொருந்திய ஒரே கட்சியாக விளங்கிய ம.இ.கா. கடந்த 2007ஆம் ஆண்டில் தலைநகரில் நடைபெற்ற ஹிண்ட்ராஃப் பேரணியை ஒரு திருப்பு முனையாகக் கொண்டு   தன்னைப் புதுப்பித்து ஒரு செயலாக்கம் கொண்ட அமைப்பாக மாற்றம் கண்டிருக்க வேண்டும். அது நடக்க வில்லை.

அந்த எழுச்சி பேரணிக்குப் பிறகு நடைபெற்ற எல்லாப் பொதுத் தேர்தல்களிலும் அக்கட்சி மோசமான தோல்விகளைத் தழுவி, ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை’யாகத் தற்பொழுது வரலாறு காணாத அளவுக்கு நம் சமூகத்தின் அரசியல் ஆதரவை இழந்துவிட்டதும் நாம் அறிந்ததே.

தேசிய முன்னணி ஆட்சியில் உள்ள போதிலும் ம.இ.கா.வை பிரதிநிதித்து ஒருவர் கூட அமைச்சரவையில் இல்லாததும் இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

ம இ காவின் இயலாமைக்கு முக்கியக் காரணம், இந்தியர்களின் அரசியல் கட்டமைப்பும் நாட்டு வளர்சிதையுடன் ஒட்டிய மாற்று அரசியலும்தான். மகாதீரின் நிழலில் அடைக்கலமாக இருந்த சமூகம் புதிய வடிவத்தில் பல் வேறு அரசியல் அமைப்புகளொடு  இணைந்தன.

‘ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை’ என்பதற்கு ஏற்ப எத்தனை அரசாங்கம் மாறினாலும் நம் சமூகம் இன்னமும் கவனிப்பாரற்றுத்தான் பரிதவிக்கிறது. குறிப்பாக அதட்டு மக்கள் எதிர்நோக்கும் எண்ணற்ற பிரச்சினைகளைக் கவனிக்க இன்னமும் ஒரு நாதியும் இல்லை.

ஆனால் ‘தும்பை விட்டு வாலைப் பிடிப்பதைப் போல’ உலக மகா ஊழல் குற்றங்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிபை விடுவிக்க ம.இ.கா. போராடுவது முற்றிலும் அறிவித்தனராக உள்ளது.

நாட்டின் ஆக உயரிய நீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றம் உள்பட எல்லா நீதிமன்றங்களும் அவரைக் குற்றவாளியெனத் தீர்மானித்துச் சிறையில் அடைத்தது.

இப்படிப்பட்ட ஒரு குற்றவாளியை விடுவிக்கக் கோரி அக்கட்சி  தனது ஆண்டுக் கூட்டத்தின் போது தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது வியப்பாக உள்ளது மட்டுமின்றி அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

நஜிபுக்கு முழுமையான மன்னிப்பு வழங்குவதை அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் அத்தீர்மானத்திற்கு 1,500கும் மேற்பட்ட  பேராளர்களும் ஒருமனதாக ஆதரித்தனர் என்பது அதைவிட மேலான அதிர்ச்சி தகவலாகும்.

நஜிப் விடுதலையானால் நம் சமூகம் எதிர்நோக்கும் அவ்வளவு பிரச்சினைகளுக்கும் தீர்வு பிறந்துவிடுமா என்பதை அப்பேராளர்கள் நினைத்துப் பார்க்கத் தவறிவிட்டனர்.

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு இதுதான் ம.இ.கா.வின் முதலாவது பேராளர் மாநாடு. அரசாங்கம் மாறியும் நம் சமூகம் தொடர்ந்து எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துத்தான் பேராளர்கள் விவாதம் செய்திருக்க வேண்டும்!

நம்மைத் தற்போது பீடித்திருக்கும் சமூகப் பிரச்சினைகளை அக்கட்சியின் பேராளர்கள் கையிலெடுத்து அறிவுபூர்வமான வகையில் விவாதங்களை முன் வைத்திருந்தால் நமக்குப் பெருமையாகவும் பெரும் மகிழ்ச்சியாகவும் இருந்திருக்கும்.

அதுமட்டுமின்றி நம் சமூகத்தின் ஆதரவை ஓரளவாவது அக்கட்சி மீட்டெடுக்க அத்தகைய விவேகமான வாதங்கள் வழிவகுத்திருக்கும். இதனை நல்லதொரு தளமாக அக்கட்சி பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

அதனை விடுத்து “நஜிபை விடுவிக்கக் கோரி நாங்கள் எல்லாரும் கை தூக்கினோம்” என்று பறைசாற்றிக் கொள்வதில் அர்த்தமே இல்லை, பெருமையும் இல்லை – அவமானம்தான்.மக்களின் பணத்தை ஒருவன் திருடி, அதிலிருந்து கையேந்தும் மக்களுக்குப்  பிச்சையாகப் போட்டால், அதைப் பெரும் நபர்கள் நன்றி காட்ட வேண்டும் என்ற சிந்தனை, மிகவும் ஆபத்தானது.

மஇகா-வின் பேராளர்கள் இதைச் செய்திருப்பது ஆச்சரியமாகவும், அபத்தமாகவும் உள்ளது.