காசாவில் தற்போதையை நிலைமையை உடனடியாக சீர்படுத்த வேண்டும் என்று உலக நாடுகளுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
ஹமாஸ் – இஸ்ரேல் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், பாலஸ்தீன அதிகாரிகள், இந்தோனேசியா, எகிப்து, சவூதி அரேபியா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் குழு இந்த வாரம் பீஜிங்குக்கு சென்றிருந்தது. அங்கு இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்து விவாதிக்கப்பட்டது. அந்தக் குழுவிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ”காசாவில் தற்போது நிலவும் நிலைமையை சரி செய்யவும், மத்திய கிழக்கில் விரைவில் அமைதியை மீட்டெடுப்பதற்கும் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை நாங்கள் எப்போதும் உறுதியாக பாதுகாத்து வருகிறோம்” என்ற அவர், காசாவில் நடந்துவரும் மனிதாபிமானமற்ற பேரழிவு குறித்து கவலை தெரிவித்தார். மேலும், காசாவின் நிலைமை உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது. சர்வதேச சமூகம் விரைந்து செயல்பட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.
தற்போதைய பாலஸ்தீன – இஸ்ரேல் மோதலில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பது மற்றும் பாலஸ்தீனப் பிரச்சினையை நியாயமான முறையில் தீர்ப்பதுதான் இந்தப் பேச்சுவார்த்தையின் குறிக்கோள் எனக் கூறப்படுகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில் அமைதி காத்து வந்த சீனா, அண்மையில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு தன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது எனக் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதல்களில் இஸ்ரேலில் ஏறத்தாழ 1,200 பேர் கொல்லப்பட்டனர். காசாவில் 13,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மருத்துவமனைகளை ஹமாஸ் பதுங்கிடமாகவும், தாக்குதலுக்கு திட்டமிடும் இடமாகவும் பயன்படுத்துகிறது என்றும், அல் ஷிபா மருத்துவம்னைக்குக் கீழ் ஹமாஸ் சுரங்கம் இருக்கிறது என்றும் கூறிவந்த இஸ்ரேல், அதனை உறுதிப்படுத்துவதுபோல் சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. காசா மருத்துவமனைகளில் 35-க்கும் மேற்பட்ட சுரங்கங்களைக் கண்டுபிடித்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
-ht