மருத்துவ மனை மீது நீர் பாய்ச்சப்பட்டதை அதிகாரி ஒப்புக் கொள்கிறார்

கடந்த ஆண்டு ஜுலை 9ம் தேதி நிகழ்ந்த பெர்சே 2.0 பேரணியின் போது ஜாலான் புடுவில் நீர் பாய்ச்சும் சாதனங்கள் பயன்படுத்திய எப்ஆர்யூ என்ற கலகத் தடுப்புப் போலீஸ் அதிகாரி ஒருவர், தமக்கு அந்த சுற்று வட்டத்தில் துங் ஷின் மருத்துவமனை இருப்பது குறித்து விளக்கமளிக்கப்படவில்லை என கூறியுள்ளார்.

கூட்டத்தைக் கலைப்பதே இரசாயனம் கலக்கப்பட்ட நீரைப் பாய்ச்சுவதின் நோக்கம் என சார்ஜெண்ட் இட்ஷ்கா சலிம் என்ற அந்த 45 வயது அதிகாரி பொது விசாரணையின் போது கூறினார்.

“சுற்று வட்டத்தில் மருத்துவ மனை ஒன்று உள்ளது என எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை,” என அவர் அந்த விசாரணையை நடத்துகின்ற மலேசிய மனித உரிமை ஆணையக் குழுவிடம் கூறினார்.

“நான் கோலாலம்பூரைச் சேர்ந்தவன் அல்ல. அங்கு மருத்துவமனை இருப்பது எனக்குத் தெரியாது…. நான் நீர் பாய்ச்சும் கருவியைப் பயன்படுத்தியதையும் மருத்துவமனைக்குள் நீரைப் பாய்ச்சியதையும் நான் ஒப்புக் கொள்கிறேன்.’

அந்த மருத்துவமனை பற்றி என் மேலதிகாரி எனக்குத் தெரிவித்ததும் நான் நீரைப் பாய்ச்சுவதை நிறுத்திக் கொண்டேன் என்றும்  இட்ஷ்கா சொன்னார்.

போலீஸ் வாகனம் 22 ஆண்டுகள் பழமையானது என்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள போலிகார்பனேட் கண்ணாடியின் காட்சிமை வரம்புக்கு உட்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் நீர் பாய்ச்சும் சாதனங்களும் ஒரே சமயத்தில் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை எனவும்  இட்ஷ்கா தெரிவித்தார்.

இன்று பொது விசாரணை மீண்டும் தொடங்கிய போது பொது விசாரணையில் அவரும் அவரது மேலதிகாரியுமான இன்ஸ்பெக்டர் நோர் ஹிஷாம் ரசாலியும் சாட்சியமளித்தார்கள்.