சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று வேகமாகப் பரவிவருவதால் அது குறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த நிமோனியா தொற்று தொடர்பான தகவல்களைப் பகிரும்படி அந்நாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஊடகச் செய்திகளின்படி சீன மருத்துவமனைகளில் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்கு அழைத்துவரப்படும் போக்கு மிக அதிகமான அளவில் அதிகரித்துள்ளது. குழந்தைகள் அனைவருமே சுவாசக் கோளாறுடனேயே அழைத்துவரப்படுகின்றனர் என்றும் அந்தத் தகவல் தெரிவிக்கின்றது.
இது தொடர்பாக நவம்பர் 12-ல் சீன தேசிய சுகாதார ஆணையம் செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. அதில், கரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதன் எதிரொலியாகவே இந்தப் புதிய தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தச் சூழலில் SARS-CoV-2 வைரஸ் (கோவிட் தொற்று) பரவல், இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவல், இன்னும்பிற தொற்றுகள் ஆகியனவற்றின் நிலவரம் குறித்து தெளிவான அறிக்கை அளிக்கும்படி உலக சுகாதார நிறுவனம் சீன அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. குழந்தைகளைப் பாதிக்கும் RSV வைரஸ், மைகோப்ளாஸ்மா நிமோனியா ஆகியனவற்றைப் பற்றியும் அறிக்கை கோரியுள்ளது.
கடந்த 2019 டிசம்பரில் சீனாவில் பரவிய கோவிட்-19 தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் பல லட்சம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது பரவும் மர்ம நிமோனியா தொற்று உலக நாடுகளைக் கவலை கொள்ளச் செய்துள்ளது.
-ht