கருங்கடல் பகுதியின் வாயிலாக உக்ரைன் தானியம் ஏற்றுமதி செய்வதில் ரஷ்யா பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சமீபகாலமாக ரஷ்ய அச்சுறுத்தலையும் மீறி உக்ரைன் தானிய ஏற்றுமதியை திறம்பட செய்து வருவது கவனம் பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை உக்ரைன் தலைநகர் கீவில் நடந்த சர்வதேச உணவுப் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பிப்பது பற்றியும், தானியங்கள் ஏற்றுமதியை மேலும் வலுப்படுத்துவது பற்றியும் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைன் உணவுத் துறை அமைச்சர் எனப் பலரும் விரிவாக விவாதித்துள்ளனர்.
கடந்த 2021 பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்தப் போர் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. ஆரம்பத்தில் கருங்கடல் பகுதியின் துறைமுகங்கள் முடக்கப்பட்டதால் உக்ரைனிலிருந்து உணவு தானிய ஏற்றுமதி முடங்கி, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து, ஐ.நா. சபையும் துருக்கியும் மத்தியஸ்தம் செய்தன. ரஷ்யா, உக்ரைன் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, தானியங்களை ஏற்றுமதி செய்ய வசதியாக உக்ரைனில் சில துறைமுகங்கள் திறக்கப்பட்டன. இவற்றின் வழியாக வெளிநாடுகளுக்கு தானிய ஏற்றுமதி செய்யப்பட்டது.
இந்நிலையில், ஐ.நா. மத்தியஸ்தால் ஏற்பட்ட உடன்படிக்கையில் இருந்து ரஷ்யா விலகியது. ஆனாலும், உக்ரைன் உலக நாடுகளுக்கு தானிய ஏற்றுமதி செய்வதில் பின்வாங்கவில்லை. மத்திய உக்ரைனில் இருந்து பஞ்சத்தால் பரிதவிக்கும் பகுதிகளுக்கு தானியங்களை கொண்டு செல்ல நிறைய நிறுவனங்கள் முன்வந்துள்ளன. தானியக் கிடங்குகளில் நிரம்பிவழியும் தானியங்கள் துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அங்கிருந்து பல பகுதிகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.
ரஷ்யா கடலில் கன்னிவெடிகளை வைத்து கப்பல்களைத் தகர்க்கும் அபாயம் இருந்தாலும் கூட கருங்கடல் பகுதியில் வாணிபம் தற்போது விறுவிறுப்பாகவே உள்ளதாக உக்ரைன்வாசிகள் சொல்கின்றனர். கோதுமை, சோளம், சூரியகாந்தி எண்ணெய் ஆகியனவற்றை ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் உக்ரைனின் விவசாயப் பொருளாதாரம் மேம்படுவதாகவும் அந்நாட்டு நிபுணர்கள் கூறுகின்றனர். செப்டம்பர் தொடங்கி இப்போது வரை 3 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்கள் எகிப்து, ஸ்பெயின், சீனா, வங்கதேசம், நெதர்லாந்து, டுனிசியா, துருக்கி நாடுகளுக்குச் சென்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா. மத்தியஸ்தம் செய்ததால் ஏற்பட்ட உடன்படிக்கையை ரஷ்யா முறித்துக் கொண்ட நிலையில், தங்களின் எச்சரிக்கையை மீறி கருங்கடல் வழியாக செல்லும் சரக்குக் கப்பல்கள் ஆயுதம் தாங்கிய கப்பல்களாகவே கவனத்தில் கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளது. தன் எச்சரிக்கைக்கு ஏற்ப இதுவரை ரஷ்யா கருங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்களை சேதப்படுத்தவில்லை என்றாலும்கூட தொடர்ந்து அச்சுறுத்தல் என்பது அகலாமல் தான் இருக்கிறது. இருப்பினும்
அண்மையில் கிவ் நகரீல் நடந்த சர்வதேச உணவுப் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பேசிய உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, “நட்பு நாடுகள் கருங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களிக்கு பாதுகாப்பாக கப்பல்களை அனுப்புவதாகக் கூறியுள்ளன. ஆனால் எங்களுக்கு வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் தேவைப்படுகின்றன. இருப்பினும் எங்களுக்கு பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால் கருங்கடல் தானிய வழித்தடம் தடையின்றி செயல்பட முடிகிறது என்று கூறியது” குறிப்பிடத்தக்கது.
இதையும் தாண்டி அண்மையில் ஒடேசாவில் லைபீரிய நாட்டுக் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதற்கு சில வாரங்கள் முன்னதாகத் தான் காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள், இடைத்தரகர்கள் உக்ரைன் அரசுடன் ஓர் ஒப்பந்தம் போட்டனர். கருங்கடலில் தானிய ஏற்றுமதி செய்யும் கப்பல்களுக்கு காப்பீடு தர முன்வந்தனர். இதனால் கப்பல் நிறுவனங்கள் தைரியமாக கருங்கடலில் கப்பலை செலுத்த முன்வந்துள்ள நிலையில் ரஷ்ய அச்சுறுத்தலையும் தாண்டி தற்போது கருங்கடலில் தானிய வாணிபம் சீரடைந்துள்ளது.
உக்ரைன் கோதுமை மற்றும் சோளம் போன்ற உணவு தானியங்களின் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக உள்ளது, மேலும் ஐ.நா.வின் உணவு உதவி திட்டங்களில் முக்கிய பங்களிப்பாளராகவும் உள்ளது. மேலும், ஆசியா – ஐரோப்பிய கண்டங்களுக்கு இடையேயான முக்கிய வழித்தடமாக கருங்கடல் உள்ளது. இதனாலேயே அத்தனை அச்சுறுத்தலையும் மீறி உணவு உதவித் திட்டங்களுக்காவது உக்ரைன் தானியங்களை கொள்முதல் செய்ய பல அமைப்புகள் அச்சுறுத்தல்களையும் மீறி வாணிபத்தில் ஈடுபடுகின்றன.
இந்த நிலையில், புதிய வழித்தடத்தை உருவாக்கி அதன் வாயிலாக ஒரு மாதத்துக்கு 6 மில்லியன் மெட்ரிக் டன் தானியங்களை ஏற்றுமதி செய்வதே தங்களின் இலக்கு என்று உக்ரைன் வேளாண் அமைச்சர் மைகோலா சோஸ்கி தெரிவித்துள்ளார். கெடுபிடிகள், அச்சுறுத்தல்களுக்கு இடையே கடந்த அக்டோபரில் மட்டும் 4.3 மில்லியன் டன் தானியங்கள் கருங்கடல் வழித்தடம் வாயிலாக உக்ரைனில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-ht