எம்சிஎல்எம்மின் தலைவர் ராஜா பெட்ரா கடந்த வார இறுதியில் அளித்த நேர்காணலின் விளைவாக எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு அதன் சுயேட்சை வேட்பாளர் திட்டத்தின் கீழ் மலேசியன் சிவில் லிபர்ட்டிஸ் மூவ்மெண்ட் (எம்சிஎம்எம்) தேர்வு செய்திருந்த இருவர் அதிலிருந்து விலகிகொண்டுள்ளனர்.
“நான் மலேசியன் சிவில் லிபெர்ட்டிஸ் மூவ்மெண்டிருந்து விலகிக்கொள்வதை வருத்தத்துடன் அறிவிக்கிறேன்”, என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் மாலிக் இம்தியாஸ் சார்வார் கூறினார்.
“நான் இவ்விவகாரத்தை ஸ்ரீகாந் பிள்ளையுடன் விவாதித்தேன். அவர் எனது கருத்தைப் பகிர்ந்துக் கொள்வதுடன் தானும் விலகிக்கொள்வதை தெரிவிக்குமாறு என்னைக் கேட்டுக்கொண்டார்”, என்று மாலிக் மேலும் கூறினார்.
ராஜா பெட்ரா தமது தனிப்பட்ட கருத்தை வெளியிட்டார் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக கூறிய மாலிக், ஆனால் அது எம்சிஎல்எம் சார்பில் வெளியிடப்பட்டதாக கொடுக்கப்பட்டுள்ள தோற்றம் “வருத்தத்திற்குரியது” என்றார் மாலிக்.
ராஜா பெட்ரா மிகக் கடுமையாக எம்சிஎல்எம்மின் இலட்சியத்தை கீழறுத்து விட்டார், என்று மாலிக் மேலும் கூறினார்.