செய்தி இணையத் தளமான மலேசியாகினிக்கு எதிராக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சம்ர்பித்த அவதூறு வழக்கை, நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வு காணப்பட்டதைத் தொடர்ந்து சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் மீட்டுக் கொண்டுள்ளார்.
தாயிப் குடும்பத்துடன் தொடர்புள்ளது எனக் கூறப்பட்ட ரீஜண்ட் ஸ்டார் என்ற ஹாங்காங் நிறுவனத்துக்கு ஜப்பானிய கப்பல் நிறுவனங்கள் கொடுத்ததாக கூறப்படும் கையூட்டுக்கள் மீதான தனது முடிவை தோக்கியோ வரி விதிப்பு அலுவலகம் மாற்றிக் கொண்டு விட்டதை மலேசியாகினி ஒப்புக் கொண்டது அந்தத் தீர்வில் அடங்கியுள்ளது.
“மலேசியாகினி அந்த நேரத்தில் பல ஜப்பானிய ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் மட்டுமே அந்தக் கட்டுரைகளை வெளியிட்டது,” என மலேசியாகினி வழக்குரைஞர் பாஹ்ரி அஸ்ஸாட் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட அறிக்கையில் கூறினார்.
“அந்தக் கட்டுரைகள் வாதிக்கு துன்பத்தையும் தர்ம சங்கடத்தையும் அவருடைய தோற்றத்துக்கு களங்கத்தையும் ஏற்படுத்தியதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதனால் அவருக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம்.”
“நாங்கள் மன்னிப்புக் கோருவதற்கு ஏற்ப ஜப்பானியப் போக்குவரத்து நிறுவனங்கள் கொடுத்த பணம் சட்டப்பூர்வமானவை என தோக்கியோ வரி விதிப்பு அலுவலகம் முடிவு செய்த செய்தியை நாங்கள் வெளியிடுவோம்.”
அந்த அறிக்கை வாசிக்கப்பட்ட பின்னர் தாயிப், மலேசியாகினிக்கு எதிரான வழக்கை எத்தைகைய இழப்பீடும் செலவுத் தொகையும் இல்லாமல் மீட்டுக் கொண்டார்.
அடுத்து அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரோஸில்லா யோப், தீர்வைப் பதிவு செய்து, செலவுத் தொகை ஏதும் இல்லை என ஆணையிட்டார். அந்த வழக்கை விசாரிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தேதிகளையும் அவர் ரத்துச் செய்தார்.
மலேசியாகினி சார்பில் வழக்குரைஞர்களான பாஹ்ரியும் கே சண்முகாவும் ஆஜரானார்கள். ரோபர்ட் லாஸார், தாயிப்பைப் பிரதிநிதித்தார்.
முக்கியமான சாட்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்
மலேசியாகினி தனது வழக்குரைஞர்களின் அறிவுரையைத் தொடர்ந்து அந்த “சிரமமான முடிவை” எடுத்ததாக அதன் தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான் கூறினார்.
“அந்த விவகாரம் மீதான தனது முடிவை ஜப்பானிய வரி அதிகாரிகள் மாற்றிக் கொண்டது எங்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தியது. அத்துடன் அந்த வழக்கில் முக்கியச் சாட்சி காலமானதும் எங்கள் பிரதிவாதத்திற்கு தடையாக இருந்தது.”
அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள 12 கட்டுரைகளை எழுதிய மலேசியாகினியின் முன்னாள் சரவாக் நிருபரான டோனி தியன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருதய அறுவைச் சிகிச்சையின் போது மரணமடைந்தார்.
“மலேசியாகினியின் பிரதிவாதத்திற்கு தோக்கியோ வரி விதிப்பு அலுவலகமும் தியனும் முக்கியமான தூண்களாகும். அவர்களின் சாட்சியம் இல்லாத சூழ்நிலை நமக்கு பாதகமானதாகும்,” என்றார் கான்.
“ஜப்பானிய கப்பல் நிறுவனங்கள் கொடுத்த பணம் சம்பந்தப்பட்ட விவகாரம் தவிர தாயிப் மீதான நடப்பு, எதிர்கால மலேசியாகினி செய்திகளை இந்த தீர்வு பாதிக்காது.”
“நாங்கள் தாயிப் மீதும் அவருடைய குடும்ப வர்த்தகம் மீதும் தொடர்ந்து விருப்பு வெறுப்பின்றி செய்திகளை வெளியிடுவோம்,” என்றும் கான் சொன்னார்.