கி. சீலதாஸ் – இனம், சமயம், மொழி என்கின்ற மும்முனைப் பிரச்சினைகளைக் கிளப்புவது காலங்காலமாக நடந்து வரும் ஓர் அரசியல் நடவடிக்கையாகும். இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு காணும் கொள்கையை, நடவடிக்கையை, புண்ணியச் செயலை நடுவண் ஆட்சியில் அமர்ந்திருந்த அரசியல் இயக்கங்களும் சரி, இப்பொழுது ஆட்சியில் இருக்கும் இயக்கமும் சரி, இந்த இன, மொழி பிரச்சினைகளில் தெளிவான ஒரு கொள்கையைக் கொண்டிருக்கிறார்களா என்பது சந்தேகமே.
இன, சமய விஷயங்களில் இன்றைய ஆளும் கட்சியில் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் நீதிக்கட்சியின் நிலைபாடு அம்னோ – பாஸ் கட்சிகளின் நிலைபாடுகளுக்கு மாறுபட்டதாக இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
இன, இஸ்லாமியச் சமய பாதுகாப்பு
அது ஒரு புறமிருக்க, அம்னோவின் நிலைபாடு முன்பில் இருந்தே பாஸ் கட்சியை விட தாம் தான் மலாய் இன, இஸ்லாமியச் சமய பாதுகாப்பில் முன்னிலை வகிப்பதாகக் காட்டிக் கொள்வதில் மும்முரமாக இருந்தது. அது இன்று கூட நீடிக்கிறது எனின் அதில் குறை காண முடியாது.
அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் அதன் பங்காளி கட்சிகள் எப்படி நடந்து கொண்டன என்பதும் நாம் மறக்க முடியாது. அதுபோலவே, நீதிக்கட்சி தலைமை தாங்கும் பக்காத்தான் ஹரப்பான் பங்காளிகளும் நடந்து கொள்வார்களா என்பதைக் கூர்ந்து கவனிக்காமல் இருக்க முடியவில்லை.
இன்றைய நடுவண் ஆட்சியை நடத்தும் பக்கத்தான் ஹரப்பான் ஜனநாயகச் செயல்கட்சி, சபா, சரவாக் மாநில கட்சிகளின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடன் செயல்படுகிறது. ஆனால், சபா, சரவாக் மாநிலங்களின் அரசியல் தரமே வேறு. அது இன, சமய, மொழி ஆகிய விஷயங்களில் தீபகற்ப அரசியலை விட வேறுபட்டது; முற்போக்கானது என்று கூட சொல்லலாம்.
இக்காலகட்டத்தில் சபாவும் சரவாக்கும் கையாளும் இன, சமய, மொழி பிரச்சினைகளைப் பார்க்கும்போது அங்கே விவேகமான அரசியல் நடந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை.
மலேசியா அமைப்பானது பல சிக்கல்களைக் கொண்டிருந்தது என்பதை உண்மையான வரலாறு கூறும். எனவே, நாம் அந்த உண்மையான வரலாற்றின் ஒரு சில துளிகளைப் பார்ப்போம்.
உண்மையான வரலாறு
அறுபதுகளிலும், அதற்கு முன்னரே பிரிட்டனைப் பொருத்தவரையில் இரண்டாம் உலகப் போரில் அது வெற்றி கண்டபோதிலும் அதன் சொந்த பொருளாதாரம் சீரழிந்து கொண்டிருந்தது என்பதைக் காட்டிலும் படுமோசமான சீரழிவில் தவித்துக் கொண்டிருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமது காலனிகளை இனிமேலும் ஆளும் சக்தியை இழந்துவிட்ட பிரிட்டன் அவற்றிலிருந்து வெளியேற ஆர்வம் கொண்டிருந்தது.
அத்தகைய சூழ்நிலையில் தான் சிங்கப்பூர், புருணை, வட போர்னியோ (இப்பொழுது சபா) மற்றும் சரவாக் ஆகிய பிரதேசங்கள் ஒரு விரிவான அரசியலமைப்பைக் காணலாம் என்பதைப் பிரிட்டன் விரும்பியது.
சிங்கப்பூரும் புருணையும் அரசியல் முதிர்ச்சி கொண்ட மக்களையும் அரசியல் தலைவர்களையும் கொண்டிருந்தன. ஆனால், வட போர்னியோவும், சரவாக்கும் தலைவர்களும் மக்களும் அத்தகைய அரசியல் முதிர்ச்சி கொண்டிருக்கவில்லை என்று பிரிட்டன் நினைத்தது.
எனவே, சிங்கப்பூர், புருணை, வட போர்னியோ, சரவாக் ஆகிய பிரதேசங்களை மலாயாவுடன் இணைப்பதில் ஆர்வம் காட்டியது பிரிட்டன்.
இந்த ஆலோசனையை அன்றைய மலாயா கூட்டரசு பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் இதில் ஆர்வம் காட்டவில்லை துங்கு. பிறகு, மனம் மாறி சிங்கப்பூர், புருணை, வட போர்னியோ, சரவாக் ஆகிய நாடுகள் மலாயாவுடன் இணைந்து மலேசியா காணலாம் என்று அறிவித்தார்.
மலேசியா அமைப்பைக் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன; அவற்றைத் தனியாகக் கவனிக்கலாம். இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் வட போர்னியோ, சரவாக் மக்கள் அரசியலில் முதிர்ச்சியற்றவர்கள். எனவே, அவர்களுக்குப் பாதுகாப்பான ஓர் அரசியல் அமைப்பை ஏற்படுத்தினால் மேலை நாட்டவர்களின் முதலீட்டுக்கு எந்தப் பாதிப்பும் நேராது.
அதுமட்டுமல்ல, காலஞ்சென்ற சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ, மலாயா கூட்டரசின் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் இருவரும் பிரிட்டனின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தனர்.
எனவே, வட போர்னியோவும், சரவாக்கும், சிங்கப்பூரும், புருணையும் அகண்ட மலேசியாவில் இணைவது : ஒன்று, அது கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு பரவுவதைத் தடுக்க உதவும். மற்றது மேலை நாட்டவர்களின் முதலீடுகளுக்கு எந்த ஒரு பாதகமும் ஏற்படாது பார்த்துக் கொள்ளலாம்.
மலேசியாவின் உருவாக்கம்
அதோடு மேற்கத்திய நாடுகளின் செல்வாக்கு இந்த வட்டாரத்தில் நிலைத்திருக்க உறுதியாகிவிடும். எனவே, புருணை மலேசியாவில் ஆர்வம் காட்டாததால் வட போர்னியோவும் சரவாக்கும் மலேசியாவில் இணைவதே சிறந்த அரசியல் ஏற்பாடாகக் கருதப்பட்டது.
பிரிட்டிஷ் அரசும் இதை நிறைவேற்றுவதில் மிகுந்த கவனம் செலுத்தியது எனலாம். அது ஒரு பெரும் கதை. அரசியலில் அனுபவமில்லாத சரவாக் மக்களுக்கும் அரசியல் முதிர்வுடைய மலாயா கூட்டரசு உதவும் என்று நம்பினர் பிரிட்டிஷ் தலைவர்கள்.
மலேசியா அமைந்து அறுபது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. நாம் மலேசியாவைப் பார்க்கிறோம். மலேசிய வடிவம் பெறுவதற்குக் காரணிகளாக இருந்தவர்கள் பலரும் இன்று இல்லை.
அன்று இளைஞர்களாக இருந்த என்னைப் போன்றவர்கள் அல்லது வயதில் மூத்தவர்கள் இன்று மலேசியாவைப் பார்க்கும்போது பெருமூச்சு விட வேண்டியுள்ளது. துன் டாக்டர் மகாதீர் முகமது, இரு முறை இந்நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றார். தீவிர இன, சமய வாதங்கள் பெருகியதைத்தான் நாம் கண்டோம்; இன்றும் கண்டு கொண்டிருக்கிறோம்.
மகாதீர் இப்பொழுதும் பல்லினம், பன்மொழி இயங்குவதைக் குறை கூறுவதோடு சீன, இந்தியச் சமுதாயங்கள் மீது தவறான கருத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அவரைப் போலவே பலர் இன, சமய, மொழி வேறுபாட்டில் கவனம் செலுத்தி பகைமை உணர்வை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவது அரசியல் முதிர்வை வெளிப்படுத்தவில்லையே.
அரசியலாக்கப்படும் தாய் மொழிப்பள்ளிகள்
இன்று தாய்மொழிகளைப் பாதுகாக்க நினைக்கும் சீன, தமிழ்மொழி பள்ளிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது. அவை அரசியலாக்கப்பட்டு சிறுபான்மை மக்களுக்கு நிம்மதி தராத ஒரு நிலையைத் தான் நாம் காண்கிறோம். இவையாவும் இன்று மலேசியர்களை வருத்தும் அவலங்களாகும்.
இவ்வாறு உணர்ச்சியூட்டும் பிரச்சினைகளுக்கு அடிக்கடி உயிர் கொடுப்பதன் நோக்கம்தான் என்ன?
சிறுபான்மையினர் எப்பொழுதும் தங்கள் உரிமைகளைத் தானாகவே விட்டுக் கொடுக்க வேண்டும் அல்லது பறிக்கப்படும் என்ற அச்சத்தை ஏற்படுத்துவதால் பலன் கிடைக்கும் என்று நம்புவது தவறான அணுகுமுறை என்பதை உணர்ந்தால் எல்லோருக்கும் நல்லது.
இந்த இன, சமய, மொழி பிரச்சினையை வரலாற்று கண்களுடன் பார்க்க வேண்டுமே அன்றி, உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து, நாட்டு நலனைக் கெடுப்பது நல்லதல்ல. மகாதீரின் கருத்துப்படி சீனர்களும் இந்தியர்களும் தங்களின் பூர்வீக அடையாளத்தை மறந்துவிட வேண்டும். அப்படியானால் சபா, சரவாக் பூர்வக்குடியினரின் கதி என்ன?
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, சபா, சரவாக் மக்களும் தலைவர்களும் அரசியல் முதிர்வற்றவர்கள் என்று சொல்லப்பட்டார்கள். இன்றோ அந்த மாநிலங்களின் மக்களும் தலைவர்களும் அரசியலில் நல்ல முதிர்ச்சியுடையவர்களாகத் திகழ்கிறார்கள்.
அவர்களின் பொருளாதாரம், கல்வி, சமயம், கலாச்சாரம் ஆகிய விஷயங்களில் காணப்படும் அணுகுமுறை வியக்கத்தக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அவர்கள் தீபகற்ப மலேசியர்களையும் தலைவர்களையும் பார்த்து கேட்கும் கேள்வி என்ன? எங்களிடம் காணப்படும் பெருந்தன்மை, சகிப்புக் கலாச்சாரம், அனைவரையும் அரவணைக்கும் நல்ல பண்பாடு உங்களிடம் காண முடியவில்லையே என்றால் என்ன பதில் சொல்ல முடியும்?
ஒரு காலத்தில் நீங்கள் அரசியல் மேதாவிகளாகக் கருதப்பட்டீர்கள். அந்த மேதாவித்தரம் எங்கே போயிற்று? ஏன் இழந்தீர்கள்? எங்களிடம் அவை நிறைய இருக்கின்றன. எல்லா மலேசியர்களையும் மலேசியர்களாக நடத்தும் மனப்பாங்கு எங்களுக்கு இருக்கிறது. ஆனால், நீங்கள், தீபகற்ப மலேசியர்கள் நடந்து கொள்ளும் முறையைப் பார்த்தால் நாடு உருப்படுமா என்ற கேள்விதான் எழும்புகிறது.
பல்லினங்களும், அவர்கள் தம் மொழி, சமய, கலாச்சாரப் பாதுகாப்புகளை உறுதி செய்யும் மலேசியாவை எங்களால் தர முடியும், உங்களால் தர முடியுமா? என்று சவால் விடுவது போல் இருக்கிறது. அவர்களின் அரசியல் அணுகுமுறையைத் தீபகற்ப மலேசிய தலைவர்கள் உணர்ந்து பல்லின, பன்மொழி, பல சமயங்களை உள்ளடக்கிய மலேசியாவைக் காப்பாற்றுவார்களா?
யார் மலேசியாவைக் காப்பாற்றுவார்கள் என்பதே இன்றைய கேள்வி.