தாய்ப்பை கைது செய்யும் அதிகாரம் தனக்கில்லை என்கிறது இண்டர்போல்

வெளிநாட்டு என்ஜிஓ-கள் சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் முகமட்டை கைது செய்ய வேண்டும் என்று அறைகூவல் விடுத்தபோதும் உள்நாட்டு அதிகாரிகள் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்கிறது பன்னாட்டுக் குற்றவியல் போலீஸ் அமைப்பு (இண்டர்போல்).

மலேசியாவில் மிக நீண்டகால முதலமைச்சராகவுள்ள தாயிப்பை கைது செய்ய வேண்டும் என்று அனைத்துலக அளவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இயக்கத்துக்குத் தலைமையேற்றுள்ள சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்டுள்ள புருனோ மன்செர் நிதிய (பிஎம்எப்)முக்கு இண்டர்போல் இவ்வாறு பதிலளித்துள்ளது.

“சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் சம்பந்தப்பட்ட நாட்டின் போலீசை அல்லது நீதித்துறையை நாடுங்கள்” என்று இண்டர்போலின் செயலகம் தெரிவித்ததாக பிஎம்எப் ஓர் அறிக்கையில் கூறியது.

கடந்த மாதம், பிஎம்எப்-பும் ஆறு நாடுகளைச் சேர்ந்த மேலும் 16 என்ஜிஓ-களும் தாயிப்பைக் கைது செய்ய வேண்டும் என்று மலேசியாவை வலியுறுத்தின. தாயிப்பும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் 13 பேரும் “அரசு அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியதற்காகவும் ஊழலுக்காகவும் குற்றவியல் அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டதற்காகவும்” வேறு பல குற்றச்செயல்களுக்காகவும் கைது செய்யப்பட வேண்டும் என்று அவை கூறின.

இந்தக் குற்றச்சாட்டுகளை விவரிக்கும் 10-பக்கக் கடிதம் ஒன்று மலேசிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பிஎம்எப்  கூறியது. ஆனால், கடிதம் கிடைக்கப் பெற்றது பற்றி அதிகாரிகளிடமிருந்து தகவல் எதுவும் இல்லை.

பிஎம்எப் சேகரித்த தகவல்களிலிருந்து தாயிப் குடும்பத்தாருக்கு 25 நாடுகளில் செயல்படும் 400-க்கு மேற்பட்ட நிறுவனங்களில்  பங்குரிமை இருப்பது தெரிய வந்தது. அதன் பெறுமதி பல பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்படுகிறது.

தாயிப்பு குடும்பத்தாருக்குச் சொந்தமான சொத்துகள், சட்டவிரோத வழிகளில் சம்பாதிக்கப்பட்டவை என்பதால் அவை சட்டவிரோத சொத்துகள் என்று அந்த சுவீஸ் என்ஜிஓ குற்றம் சாட்டியது.

சரவாக்கின் வெட்டுமரத்தொழிலில் கிடைத்த ஆதாயங்களைத் தம் குடும்பத்தாரின் நிறுவனங்களை வளப்படுத்தப் பயன்படுத்திக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் தொடர்பில் தாயிப்மீது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏற்கனவே விசாரணை நடைபெற்று வருகிறது. 

ஆனால், தாயிப்பும் அவரின் குடும்பத்தாரும் அக்குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள்.