டிஏபி ஒழுங்கு வாரியம் “டெய்லர்-கேட்”விவகாரத்தை விசாரிக்கும்

பேராக்கை சிறிதுகாலம் பக்காத்தான் ரக்யாட் ஆண்டபோது மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த பேராக் டிஏபி செயலாளர் இங்கா கொர் மிங், தம் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தினார் என்று கூறப்படுவது பற்றி விசாரிக்கும்படி கட்சியின் ஒழுங்கு வாரியத்துக்கு டிஏபி தலைமை உத்தரவிட்டுள்ளது.

நேற்றிரவு கோலாலம்பூரில் நடைபெற்ற மத்திய செயல்குழுக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டதாக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒழுங்கு வாரியத் தலைவர் டான் கொக் வாய், பேராக்கில் உள்ள ஒரு கிளைத் தலைவர், இங்கா கட்சிக் கட்டொழுங்கை மீறிவிட்டார் என்று குழுவிடம் புகார் செய்திருப்பதாகக் கூறினார்.

அம்னோ-ஆதரவு வலைப்பதிவர் ஒருவரும் தைப்பிங் எம்பியான இங்கா, ஈப்போ மாநகராட்சி மன்றம் அதன் உறுப்பினர்களுக்கான உடைகளுக்கான குத்தகையைக் குறிப்பிட்ட ஒரு தையல்கடைக்குத்தான் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதாகக் கூறியிருந்தார். அந்தக் கடையின் பகுதி-உரிமையாளர் இங்காவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கா, இக்குற்றச்சாட்டை மறுத்து, அந்த வலைப்பதிவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையையும் மேற்கொண்டிருக்கிறார்.

டிஏபி தேசியப் பொருளாளருமான இங்கா, நேற்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்க அவர் வருவார் என்று கூறப்பட்டிருந்த போதிலும் அவர் வரவில்லை.

“இவ்விவகாரம் தொடர்பில் ஒழுங்கு வாரியம் அதிகாரப்பூர்வமான புகார் ஒன்றைப் பெற்றது. அதனால், அதை விசாரிக்கிறது. இங்கா, மத்திய செயல்குழுவுக்கு விளக்கம் அளிக்க வேண்டியதில்லை”, என்று கூறிய டான், இங்கா பிறகு விசாரிக்கப்படுவார் என்றார்.

விசாரணை அடுத்த வாரத்துக்குள் முடிந்துவிடும் என்று அவர் நினைக்கிறார்.

விவகாரம்மீது கூட்டத்தில் சூடான வாதம்

“டெய்லர்-கேட்” என்று முத்திரை குத்தப்பட்டுள்ள இவ்விவகாரம் நேற்றைய செயல்குழுக் கூட்டத்தில் கடுமையான வாக்குவாதத்தைத் தோற்றுவித்ததாக மலேசியாகினிக்கு தெரிய வருகிறது. இங்கா கூட்டத்துக்கு வராதது பற்றியும் ஒழுங்கு வாரியம் அவர்மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பற்றியும் பல தலைவர்கள் வினவினார்கள்.

இங்கா கூட்டத்துக்கு வராதது ஏன் என்று முதலில் கேள்வி எழுப்பியவர் டிஏபி தேசிய உதவித் தலைவர் எம்.குலசேகரன். பேராக்கில் இங்காவின் பரம வைரியாகக் கருதப்படுபவர் குலசேகரன். மத்திய செயல்குழுக் கூட்டத்துக்கு வந்து விளக்கம் அளிப்பதாக இங்கா உறுதி கூறியிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

செய்தியாளர்களிடம் பேசிய டான், இங்கா ஒரு விருந்துக்குச் செல்ல வேண்டியிருந்து என்று தெரிவித்தார். ஆனால், மலேசியாகினியிடம் பேசிய வட்டாரங்கள் அது பற்றி அவர் செயல்குழுவுக்குத் தெரிவிக்கவில்லை என்று கூறின.

கர்பால்-ராமசாமி விவகாரத்துக்குக் கட்சி தீர்வுகண்டுவிட்டதாகவும் டான் கூறினார்.

“டெய்லர்கேட்” விவகாரம் தவிர்த்து ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவுக்கு எதிராகக் கட்சி உறுப்பினர் சிலர் கடந்த மாதம் செய்த ஆர்ப்பாட்டம் குறித்தும் ஒழுங்கு வாரியம் விசாரணை நடத்தும்.

பெண்டாயான் மாநிலச் சட்டமன்றத் தொகுதியில் பூ, தாம் விரும்பும் ஒருவரை வேட்பாளராக நிறுத்தத் திட்டம் போட்டிருப்பது அவர்களுக்குப்  பிடிக்கவில்லை..அதுதான் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்களை டான் வெளியிடவில்லை. அவர்கள் அடிநிலை உறுப்பினர்கள் என்று மட்டும் அவர் கூறினார்.