புதிய கூலிம் மாவட்ட அதிகாரி மதுபான தடையை நீக்குகிறார்

அரசியல் களத்தில் இருபுறமுள்ளவர்கள் ஆட்சேபம் தெரிவித்ததைத் தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட கூலிம் மாவட்ட அதிகாரி முகமட் சொஹ்டி சாஆட் தமக்கு முன்பு பதவி வகித்தவர் அறிமுகம் செய்த மதுபான தடையை நீக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

கூலிமுக்குக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி மாற்றப்பட்ட  சொஹ்டி, ஜனவரி முதல் தேதி பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார். தமக்கு முன்பு மாவட்ட அதிகாரியாக இருந்தவர் தலைமை தாங்கிய மன்றக் கூட்டத்தில் அந்தத் தடையை விதிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது பற்றி தமக்குத் தெரியாது என சொஹ்டி சொன்னார்.

அந்த விவரங்களை சீன மொழி நாளேடான சின் சியூ இன்று வெளியிட்டுள்ளது.

அந்த விவகாரத்தை மறு ஆய்வு செய்து தடைக்குப் பதில் புதிய கொள்கையை அமலாக்குவது பற்றி விவாதிக்க தாம் விரைவில் கூட்டம் ஒன்றை நடத்தப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம்களுக்கும் 18 வயதுக்கும் குறைந்த இளைஞர்களுக்கும் கடைக்காரர்கள் மதுபானத்தை விற்பதைத் தடை செய்யும் நடப்பு விதிமுறைகளை தொடருவது என்னும் மாநில அரசாங்க, ஊராட்சி மன்றங்களின் நிலை மிகவும் தெளிவானது என்றும் சொஹ்டி வலியுறுத்தினார்.

ஜுன் மாத இறுதியில் கூலிமில் உள்ள மதுபான கடைகளுக்கான அனுமதிகள் இயல்பாகவே ரத்துச் செய்யப்பட்டு விடும் என அங்குள்ள மதுபானக் கடை உரிமையாளர்களுக்கு நகராட்சி மன்றத்திலிருந்து கடிதங்கள் கிடைத்துள்ளதாக நேற்று பல நாளேடுகள் செய்தி வெளியிட்டிருந்தன.

கூலிமை “மதுபானம் இல்லாத மாவட்டமாக” மாற்றும் நகராட்சி மன்றக் கொள்கைக்கு ஏற்ப அவ்வாறு செய்யப்படுவதாகக் கூறப்பட்டது.

அந்த நடவடிக்கையை மசீச, கெரக்கான் உட்பட பல தரப்புக்கள் கடுமையாகக் குறை கூறின. கெடாவில் பாஸ் தலைமையில் இயங்கும் மாநில அரசாங்கம் இஸ்லாமியச் சட்டங்களை அமலாக்க முயற்சி செய்வதாகவும் அவை குற்றம் சாட்டின.

ஆனால் அந்தத் தடை குறித்துத் தங்களுக்குத் தெரியாது என கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக்கும் வீடமைப்பு, ஊராட்சித் துறைகளுக்கு பொறுப்பான ஆட்சி மன்ற உறுப்பினர் பாரோல்ராஸி ஸாவிவார்-ரும் கூறியுள்ளனர்.